< Back
மாநில செய்திகள்
பெரியகுளத்தில் நடந்த கலவரம் குறித்துநீதிபதி தலைமையில் விசாரணை:பல்வேறு அமைப்பினர் கலெக்டரிடம் மனு
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளத்தில் நடந்த கலவரம் குறித்துநீதிபதி தலைமையில் விசாரணை:பல்வேறு அமைப்பினர் கலெக்டரிடம் மனு

தினத்தந்தி
|
25 April 2023 12:15 AM IST

பெரியகுளத்தில் நடந்த கலவரம் தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார்.

இக்கூட்டத்தில் மனு கொடுக்க, அம்பேத்கர், பெரியார், மார்க்சிய, சிறுபான்மையினர் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்வாணன், தர்மர் ஆகியோர் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, எஸ்.டி.பி.ஐ., தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் வந்தனர். அவர்கள், கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

நீதிபதி தலைமையில் விசாரணை

அந்த மனுவில், 'பெரியகுளத்தில் கடந்த 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவின் போது, பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். டி.கள்ளிப்பட்டி கிராம மக்கள் மாலை அணிவிக்க வரும்போது, கூட்டத்தை நோக்கி கல் வீசியதால் பதற்றமான சூழல் நிலவியது. ஆனால் அம்பேத்கர் சிலை அருகில் கூடியிருந்த மக்கள் மீது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசார் தடியடி நடத்தினர்.

படித்த இளைஞர்கள் உள்பட 63 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது, பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, உண்மை தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசாரணைக்குழு அமைக்க தாமதம் ஏற்பட்டால் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்' என்று கூறப்பட்டிருந்தது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஆவின் தொழிலாளர்கள்

தேனி ஆவின் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'கடந்த ஆண்டு ஜூன் மாதம் எங்களுக்கு தமிழக அரசு 3 சதவீதம் அகவிலைப்படி அறிவித்தது. மீண்டும் டிசம்பர் மாதம் 4 சதவீதம் அகவிலைப்படி அறிவித்தது.

மற்ற அனைத்து ஒன்றியங்களிலும் 7 சதவீத அகவிலைப்படி வழங்கிவிட்டார்கள். ஆனால், எங்களுக்கு எந்த அகவிலைப்படியும் வழங்கவில்லை. எனவே, எங்களுக்கு அகவிலைப்படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்