பெரம்பலூர்
ரேஷன் அரிசி கடத்தல்-பதுக்கல் குறித்துதகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்
|ரேஷன் அரிசி கடத்தல்-பதுக்கல் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவின்படி, ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தினந்தோறும் வாகன சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்களிடையே ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது தகவல்கள் தெரிவிக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இலவச தொலைபேசி எண்ணுடன் சுவரொட்டிகளை பொதுமக்கள் பார்வையில் படும் பகுதிகளான பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தம், ரேஷன் கடைகள், ஊராட்சி மன்ற அலுவலகம், சுங்கச்சாவடி, பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களிலும் ஒட்டி விழிப்புணர்வு செய்து வருகின்றனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் கடத்தல், பதுக்கல் சம்பந்தமான புகார் மற்றும் தகவல் தெரிவிக்க பொதுமக்கள் உடனடியாக 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்று அந்தந்த மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.