திருச்சி
பிரசவ வலியுடன் வந்த கர்ப்பிணி மருத்துவமனை செல்ல ரெயில்வே கேட்டை திறக்க மறுப்பு
|பிரசவ வலியுடன் வந்த கர்ப்பிணி மருத்துவமனை செல்ல ரெயில்வே கேட்டை திறக்க மறுத்ததால் ரெயில்வே ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
ரெயில்வே கேட் மூடல்
திருச்சி-காரைக்குடி ரெயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் குமாரமங்கலம் ரெயில் நிலையத்தில் இருந்து உடையான்பட்டி வரை நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள ஆவூர் பிரிவு சாலை, குமாரமங்கலம் செல்லும் சாலைகளில் உள்ள ரெயில்வே கேட் கடந்த 11 மற்றும் 14-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படுவதாக முன் அறிவிப்பு செய்யப்பட்டு பராமரிப்பு பணி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திருச்சி - புதுக்கோட்டை சாலையில் இருந்து குமாரமங்கலம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டு பகல் 12 மணி முதல் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 1 மணி நேரத்திற்கும் மேலாக ரெயில்வே கேட் திறக்கப்படாததால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
மறியல் முயற்சி
இது குறித்து அவர்கள் கேட்டபோது ஊழியர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக பிரசவ வலியுடன் மருத்துவமனைக்கு செல்ல ஒரு கர்ப்பிணி வந்ததை அறிந்தும், ரெயில்வே ஊழியர்கள் கேட்டை திறக்க மறுத்துவிட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ரெயில்வே ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த உள்ளாட்சி பிரதிநிதி ஒருவர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து 2 மணி நேரம் கழித்து ரெயில்வே அதிகாரிகள் கேட்டை திறந்தனர். ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் அப்பகுதியில் இருபுறங்களிலும் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.