< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட ஒப்புதல் மறுப்பு: அவர் கட்சிக்காரர் சொல்வதையே அவரும் மீண்டும் சொல்கிறார் - சு.வெங்கடேசன்
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட ஒப்புதல் மறுப்பு: அவர் கட்சிக்காரர் சொல்வதையே அவரும் மீண்டும் சொல்கிறார் - சு.வெங்கடேசன்

தினத்தந்தி
|
8 March 2023 10:30 PM IST

தமிழ்நாட்டு மக்களிடம் அவர் கட்சிக்காரர் சொல்வதையே அவரும் மீண்டும் சொல்வதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி நிறைவேறியது. அதன்பிறகு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு கவர்னரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை.

கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக கவர்னர் சில விளக்கம் கேட்டிருந்தார். கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியது. அந்த விளக்கத்தை கவர்னர் ஆய்வு செய்து வந்தார்.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி தமிழ்நாடு அரசுக்கு கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் 2-வது முறையாக திருப்பி அனுப்பினார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான மசோதாவை திருப்பி அனுப்பிய போது ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குப்படுத்தும் சட்ட மசோதாவை மாநில அரசு (தமிழ்நாடு அரசு) கொண்டு வர அதிகாரம் இல்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தனது கடிதத்தில் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டு மக்களிடம் அவர் கட்சிக்காரர் சொல்வதையே அவரும் மீண்டும் சொல்வதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட ஒப்புதல் மறுப்பு. திரும்பி அனுப்பினார் ஆளுநர். தமிழ்நாட்டு மக்களிடம் அவர் கட்சிக்காரர் சொல்வதையே அவரும் மீண்டும் சொல்கிறார். நான் இட்லி சுடவோ, தோசை சுடவோ தமிழ்நாட்டிற்கு வரவில்லை. மாநில உரிமையை சுடவே வந்துள்ளேன். உங்களால் என்ன செய்துவிடமுடியும்..? " என்று அதில் சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்