காதலித்து கர்ப்பமாக்கிய பெண்ணை ஏற்க மறுப்பு: வாலிபர் மீது போலீசில் புகார்
|கர்ப்பமாக்கிவிட்டு தன்னுடன் வாழ மறுப்பதாக வாலிபர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
வேலூர்,
கோவையை சேர்ந்த 28 வயது இளம்பெண் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் சில மாதங்களுக்கு முன்பு வேலூர் அருகே ஊசூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். மேலும் அவர் ரகசியமாக எனக்கு தாலி கட்டி என்னுடன் குடும்பம் நடத்தினார். இதனால் நான் கர்ப்பமானேன். தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளேன்.
இந்த நிலையில் ராஜேஷ் என்னுடன் வாழ மறுக்கிறார். எனது கர்ப்பத்துக்கும் நான் காரணம் இல்லை என்று கூறுகிறார். தொடர்ந்து நான் ஊர் பிரமுகர்களை அழைத்து பஞ்சாயத்தில் தெரிவித்தேன். அப்போதும் அவர் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை.
மேலும் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து கீழே தள்ளிவிட்டனர். இதற்கு அவரின் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்தனர். எனவே ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் என 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.