இன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் - இளைஞர்கள் கைது
|அரிவாள், கத்தியுடன் ரீல்ஸ் பதிவிட்ட இரண்டு வாலிபர்கள் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மீராசா மரைக்கார் மகன் சேது நூர்தீன் (வயது24). இவர் கையில் அரிவாளுடன் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.
இதேபோன்று, காயல்பட்டினம் சுனாமி நகரை சேர்ந்த ஆஷிப்அலி என்ற முத்துமொகுது (19) என்பவர் தனது கையில் அரிவாளை வைத்துக் கொண்டும், தலைக்கு மேல் உயர்த்தி காட்டி ஒரு போட்டோவையும், அமர்ந்து கொண்டு இடது கையில் அரிவாளை பிடித்துக் கொண்டு வலது கையால் பனியன் காலரை தூக்கி காட்டியும் மற்றொரு போட்டோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த 2 வாலிபர்களின் வீடியோ மற்றும் போட்டோ குறித்து ஆறுமுகநேரி போலீ்ஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 2 வாலிபர்களையும் தேடி வந்தனர். நேற்று இந்த 2 பேரும் சிக்கினர். இருவரிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
தங்களை பார்த்து பிறர் பயப்பட வேண்டும் என்பதால், இப்படி ரீல்ஸ் பதிவு செய்ததாக அவர்கள் போலீசாரிடம் கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.