ரீல்ஸ் மோகம்: கொள்ளிடம் பாலத்தில் 'தண்டால்' எடுத்த வாலிபர்
|பதறிப்போன சிலர் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அந்த இளைஞரை கீழே இறங்கி வருமாறு கேட்டுக்கொண்டனர்.
திருச்சி,
இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி பெண்கள் மத்தியிலும் "ரீல்ஸ்" மோகம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி நம்பர் 1 டோல்கேட் செல்லும் கொள்ளிடம் பாலத்தின் சிமெண்டு தடுப்புச்சுவரில் இளைஞர் ஒருவர் விறுவிறுவென ஏறி 'தண்டால்' எடுக்க தொடங்கினார்.
அப்போது கொள்ளிடம் பாலத்தில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அவர் தவறி கீழே விழுந்தால் ரோட்டில்தான் விழ வேண்டும் அல்லது அந்த பக்கம் உள்ள ஆற்றில் விழ வேண்டும். இதனால் அதனைப் பார்த்து பதறிப்போன சிலர் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அந்த இளைஞரை கீழே இறங்கி வருமாறு கேட்டுக்கொண்டனர்.
சற்று நேரத்துக்கு பிறகு அவர் கீழே இறங்கி வந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.