< Back
மாநில செய்திகள்
140 அடி தேக்குவதற்காக முல்லைபெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
மாநில செய்திகள்

140 அடி தேக்குவதற்காக முல்லைபெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

தினத்தந்தி
|
19 Nov 2022 11:33 AM IST

142 அடிவரை நீர்மட்டம் உயர்வதற்கு முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

கூடலூர்,

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றது.

வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. நவம்பர் 20-ந்தேதி வரை 140 அடியும், அதற்குமேல் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தற்போது மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் 142 அடிவரை நீர்மட்டம் உயர்வதற்கு முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 667 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 511 கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 138.20 அடியாக உள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் 142 அடியை மீண்டும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது. அணைக்கு 1257 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1669 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 132 கனஅடிநீர் வருகிறது. இதில் 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், 92 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 64 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

மேலும் செய்திகள்