< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு குறைப்பு
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு குறைப்பு

தினத்தந்தி
|
4 Aug 2024 10:26 AM IST

கர்நாடகாவில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது.

சேலம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரியில் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணையும் நிரம்பியது. கடந்த 30-ந் தேதி மாலை 6 மணிக்கு அணை நிரம்பியதும் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக 1.80 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட்டது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம், மற்றும் ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கர்நாடகாவில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் உபரிநீர் திறப்பும் வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்