தேனி
மக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா?
|மக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா? இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:-
சமையல் கியாஸ் என்பது ஒரு நேரத்தில் வசதியானவர்கள் சமையலறைகளில் மட்டுமே இருந்து வந்தது. மத்திய, மாநில அரசுகளின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்தின் விளைவாக ஏழைகளின் சமையலறைக்கும் அது இப்போது வந்துவிட்டது.
கியாஸ் இல்லாமல் சமையலறைகள் இல்லை என்ற இலக்கை நோக்கி இன்றைக்கு நாம் நகர்ந்து வருகிறோம்.
அரசு மானியம்
முன்பு எல்லாம் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு கணிசமாக மானியத் தொகை வழங்கியதால் வெறும் ரூ.50, ரூ100 விலைக்குகூட சிலிண்டர் வாங்கிய காலம் உண்டு.
நாள் போக்கில் அந்த மானியத் தொகை குறைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் சிலிண்டரை முழுத் தொகை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும், அவரவர் வங்கிக் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அனைவரும் முழுத்தொகை கொடுத்து வாங்கும் மனநிலைக்கு வந்துவிட்டவுடன் மானியத்தை வங்கிகளில் செலுத்துவதை கொஞ்சம், கொஞ்சமாக அரசு நிறுத்திவிட்டது. இதனால் ரூ.1000-க்கு மேல் சிலிண்டரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு அனைவரும் தள்ளப்பட்டனர்.
விலை நிர்ணயம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியாகிறது.
அதேபோல், ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
வரவேற்பு
அந்த வகையில், கடந்த 1-ந்தேதி வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.92.50 குறைக்கப்பட்டு ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. ஆனால் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 1,118 விலையில் விற்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு மாதம் பிறக்கும் போதும் வீட்டு சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துவிடுமோ? என்று இல்லத்தரசிகளுக்கு ஒருவித அச்சம் மேலோங்கி இருந்து வந்தது. இந்தநிலையில், ரக்்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பரிசாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்களின் சுமையை குறைக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை இல்லத்தரசிகள் மனதார வரவேற்று உள்ளனர்.
குற்றச்சாட்டு
இந்த ஆண்டு இறுதியில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
எனவே இந்த திடீர் விலை குறைப்பு மக்களின் மாதாந்திர பட்ஜெட் சுமையை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதா? அல்லது எதிர்வரும் தேர்தலை மனதில்கொண்டு அறிவிக்கப்பட்டதா? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்து வருமாறு:-
மகிழ்ச்சி அளிக்கிறது
கம்பத்தை சேர்ந்த இல்லத்தரசி முத்தம்மாள் கூறும்போது, 'வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது. கிடுகிடுவென பல முறை உயர்த்தப்பட்ட விலை தற்போது தான் குறைக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது என்பதற்காக கூட விலையை திடீரென குறைத்து இருக்கலாம். இருப்பினும் ஏழை, எளிய மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி தான். தமிழக அரசும் தனது பங்கிற்கு விலையை கொஞ்சம் குறைத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.
உப்புக்கோட்டையை சேர்ந்த இல்லத்தரசி செல்வி கூறும்போது, 'சமையல் கியாஸ் விலை சில ஆண்டுகளில் பலமுறை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் கியாஸ் சிலிண்டர் வாங்குவதற்கு ஆகும் செலவு அதிகரித்துக் கொண்டே சென்றது. கிராமங்களில் பலரும் கியாஸ் பயன்பாட்டை குறைத்து விறகு அடுப்புக்கு மாறிவந்தனர். தற்போது விலை குறைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. முன்பே குறைத்து இருக்கலாம். பெட்ரோல், டீசல் விலையையும் குறைத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும். எனவே, பெட்ரோல், டீசல் விலையையும் அரசு குறைக்க வேண்டும்' என்றார்.
தேர்தலுக்கான அச்சாரம்
உப்புக்கோட்டையை சேர்ந்த இல்லத்தரசி கீர்த்தனா கூறும்போது, 'ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கு அடிப்படை தேவைகளுக்கான செலவினம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கியாஸ் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கச் செய்தது. தற்போது சிலிண்டருக்கு ரூ.200 குறைத்து இருப்பது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. மற்ற பொருட்களின் விலைவாசியை குறைக்கவும் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்' என்றார்.
தேனியை சேர்ந்த டீக்கடைக்காரர் ஜீவா கூறும்போது, 'வீட்டு உபயோக சமையல் கியாஸ் விலையை குறைத்து இருப்பதை தேர்தலுக்கான அச்சாரமாக தான் பார்க்கத் தோன்றுகிறது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையையும் குறைக்க வேண்டும். டீக்கடைகள், ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு சிலிண்டர் விலை உயர்வும் முக்கிய காரணம். எனவே வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை குறைப்பதோடு, பெட்ரோல், டீசல் விலையையும் குறைத்தால் அத்தியாயவசிய பொருட்களின் விலை குறைந்து மக்கள் மிகவும் பயன்பெறுவார்கள்' என்றார்.