கோவை நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு..!
|கொள்ளையில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜயகுமார் என தெரியவந்துள்ளது.
கோவை,
கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 28-ந் தேதி அதிகாலை 2 மணியளவில் முகமூடி அணிந்து நகைக்கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமி, கடையின் 2 தளங்களிலும் கண்ணாடி ஷோகேசில் இருந்த 200 பவுன் நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றார். இதையடுத்து 5 தனிப்படைகள் அமைத்து தப்பிச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கடையில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், கோவை நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 200 பவுன் நகைகளை போலீசார் தற்போது மீட்டுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜயகுமார் என தெரியவந்துள்ளது. வீட்டில் பதுக்கி வைத்திருந்த நகைகளை விஜயகுமாரின் தாயாரிடம் இருந்து போலீசார் மீட்டனர். நகைகள் மீட்கப்பட்ட நிலையில், கொள்ளையன் விஜயகுமாரை தனிப்படை போலீசார் தர்மபுரியில் முகாமிட்டு வலைவீசி தேடி வருகின்றனர்.
விஜயகுமாருக்கு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.