< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் அருகே ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் அருகே ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

தினத்தந்தி
|
31 July 2022 2:25 PM IST

காஞ்சீபுரம் அருகே ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர் நிலை புறம்போக்கு நிலங்களை மீட்கும் பணியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர்ஆர்த்தி உத்தரவின்பேரில் மாவட்ட வருவாய்த் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேடு கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியை பொதுமக்கள் ஆக்கிரமித்து விளை நிலங்களாக மாற்றி பல ஆண்டுகளாக பயிர்செய்து வருவது வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து செவிலிமேடு ஏரி நிலங்களை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு வருவாய்த்துறையினரும், பொதுப்பணித் துறையினரும், அறிவிப்புகள் வழங்கி நிலங்களை அளந்து எல்லைக்கல் நட்டனர். இந்த நிலையில் தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் பயிரிட்டுள்ளனர்.

இது குறித்து அறிந்த நிலையில் காஞ்சீபுரம் தாசில்தார் பிரகாஷ், பொதுப்பணித்துறை இளம் என்ஜினீயர் மார்க்கண்டன் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செவிலிமேடு ஏரி பகுதிக்கு சென்று பயிர் செய்துள்ள நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரங்கள், டிராக்டர்கள் உதவியுடன் அகற்றி ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டனர்.

அதன்படி செவிலிமேடு கிராமத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் மட்டும் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 70 ஏக்கர் நிலங்களை மீட்டனர். பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலத்தில் மீண்டும் நுழையவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ கூடாது என்று அறிவிப்பு பலகைகளை வைத்தனர்.

ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்யப்பட்டு வரும் நீர்நிலை புறம்போக்கு நிலங்களை அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி தொடர்ந்து மீட்டு வருவதால் பயிர் செய்த ஆக்கிரமிப்பாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்