சென்னை
ஆடிட்டர் வீட்டில் கொள்ளை போன நகை-பணம் மீட்பு - குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படையினர் தேடுதல் வேட்டை
|சென்னை மேற்கு சைதாப்பேட்டை ஆடிட்டர் வீட்டில் கொள்ளை போன பணம்-நகைகளை மீட்ட போலீசார், குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
சென்னை,
சென்னை மேற்கு சைதாப்பேட்டை, அரங்கநாதன் சுரங்க பாதை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தாணுமலையான் (வயது 65). ஆடிட்டரான இவரது வீட்டில் கடந்த 21-ந் தேதி அன்று பட்டப்பகலில் கொள்ளையர்கள் 4 பேர் புகுந்து ரூ.7 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 25 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். தாணுமலையானை கை-கால்களை கட்டிப்போட்டு, கத்திமுனையில் இந்த துணிகர கொள்ளை அரங்கேற்றப்பட்டது. கொள்ளையர்கள் 4 பேரும் முகத்தில் முகமூடி அணிந்திருந்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளைச்சம்பவம் குறித்து குமரன்நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, துணை கமிஷனர் மகேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் கிறிஸ்டின் ஜெய்சில் தலைமையில் 3 தனிப்படை போலீசார் இந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்தாலும், அவர்களில் ஒருவரது குரல் கொள்ளையர்களை அடையாளம் காட்டியது. அந்த குரல், தாணுமலையான் வீட்டில் வேலை பார்த்த கார்டிரைவர் உசேனின் குரல் என்று அடையாளம் தெரிந்தது. உசேனை வேலையில் இருந்து, தாணுமலையான் நீக்கி விட்டதாக தெரிகிறது. அதற்கு பழிவாங்கும் வகையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து உசேன் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
கார்டிரைவர் உசேன் கொள்ளையனாக மாறிவிட்டதாக தெரிய வந்ததால், அவரை முதலில் பிடிக்க போலீசார் வியூகம் வகுத்தனர். அவரது உறவினர் வீடுகளை மாறுவேடத்தில் போலீசார் கண்காணித்தனர். மேலும் அவரது செல்போன் நம்பரை வைத்து, அவர் யாருடனாவது பேசுகிறாரா, என்றும் போலீசார் விசாரித்தனர்.
ஆடிட்டர் தாணுமலையானின் கார் டிரைவர் உசேன் அவரது தாயாரிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது. உடனே அவரது தாயார் வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கொள்ளை அடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளில் பெரும்பாலானவற்றை உசேனின் தாயார் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றி மீட்டனர்.
ஆனால் உசேன் உள்ளிட்ட கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. அவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. இதற்காக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் போலீசார் முகாமிட்டுள்ளனர்.