< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை கோவிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கோவிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு

தினத்தந்தி
|
6 Oct 2023 5:46 AM IST

திருவண்ணாமலை கோவிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளை போலீசார் பத்திரமாக மீட்டனர். அந்த சிலைகளை ரூ.6 கோடிக்கு விலை பேசி விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 36). ரியல் எஸ்டேட் தரகர் தொழில் செய்கிறார். இவர் பழமையான மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலை ஒன்றை ரூ.2 கோடிக்கு விற்பதற்கு விலை பேசி வருவதாகவும், அவரது செயல்பாட்டில் சந்தேகம் உள்ளதாகவும், சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். ஐ.ஜி. தினகரன், சூப்பிரண்டு டாக்டர் சிவகுமார் ஆகியோர் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், சத்தியபிரியா உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை இதற்காக அமைக்கப்பட்டது.

வியாபாரிகள் போல...

தனிப்படை போலீசார் தரகர் பாலமுருகனிடம், சிலை வாங்கும் வியாபாரிகள் போல மாறுவேடம் போட்டு, பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 10 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு குறிப்பிட்ட மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலையை பாலமுருகன் மாறுவேட போலீசாரிடம் காட்டினார். ரூ.2 கோடிக்கு அந்த சிலையை வாங்கிக்கொள்ள மாறுவேட போலீசார் ஒப்புக்கொண்டது போல நடித்தனர்.

முதலில் ரூ.2 கோடி கொடுத்து இந்த சிலையை வாங்கினால், சென்னையில் தனது நண்பன் பிரபாகரனிடம் உள்ள பிரமாண்ட விநாயகர் சிலை ஒன்றையும் விற்பனைக்கு காட்டுவதாக பாலமுருகன் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இரண்டு சிலைகளையும் வாங்கிக்கொள்வதாக மாறுவேட போலீசார் ஒப்புக்கொண்டனர்.

3 பேர் கைது-சிலைகள் மீட்பு

பாலமுருகன் தன்னிடம் உள்ள மாணிக்கவாசகர் சிலையுடன் சென்னை வந்தார். சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் வைத்து, பிரபாகரனை மாறுவேட போலீசாருக்கு, பாலமுருகன் அறிமுகப்படுத்தினார். பிரபாகரன், குறிப்பிட்ட விநாயகர் சிலையை மாறுவேட போலீசாரிடம் காட்டினார். விநாயகர் சிலைக்கு ரூ.4 கோடி தர வேண்டும், என்று பேரம் பேசினார்.

மாறுவேட போலீசார் உடனே தங்களது வேடத்தை கலைத்து, பாலமுருகன், பிரபாகரன் (40) மற்றும் இன்னொரு நபர் மணிகண்டன் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மாணிக்கவாசகர் மற்றும் விநாயகர் ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டது. அந்த 2 சிலைகளும் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது. குறிப்பிட்ட அந்த கோவில் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த கோவிலை காட்டுவதாக, கைதானவர்கள் போலீசாரிடம் கூறி உள்ளனர்.

ரூ.2 கோடி மதிப்பு

மீட்கப்பட்ட இரண்டு சிலைகளும் 18-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது. அவை இரண்டும், சர்வதேச மார்க்கெட்டில் ரூ.2 கோடி வரை விலைபோகும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வெளிநாட்டுக்கு இந்த சிலைகளை கடத்தவே திட்டமிட்டு, குற்றவாளிகள் செயல்பட்டுள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு இந்த தகவல் கிடைத்ததால், குற்றவாளிகள் சிலைகளுடன் போலீசாரிடம் மாட்டினார்கள்.

இந்த சிலைகள் திருடப்பட்ட கோவிலை கண்டுபிடித்து, அந்த கோவிலுக்கு விரைவில் சிலைகள் இரண்டும், முறைப்படி கோர்ட்டு அனுமதியுடன் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்