< Back
மாநில செய்திகள்
பண்ருட்டியில்     பல கோடி ரூபாய் மதிப்பிலான 1¾ ஏக்கர் இடம் மீட்பு;  இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி
கடலூர்
மாநில செய்திகள்

பண்ருட்டியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 1¾ ஏக்கர் இடம் மீட்பு; இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி

தினத்தந்தி
|
19 Sep 2023 6:45 PM GMT

பண்ருட்டியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 1¾ ஏக்கர் இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.

பண்ருட்டி,

திருக்கோவிலூர் கோவிலுக்கு...

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேலப்பாளையத்தில் குரு லட்சுமி அறக்கட்டளை ஒன்று இயங்கி வந்தது. இந்த அறக்கட்டளைக்கு பண்ருட்டியில் முக்கிய இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இதில் பண்ருட்டி பஸ் நிலையத்திற்காக நகராட்சி நிர்வாகத்துக்கு பெரும்பாலான இடத்தை அறக்கட்டளை ஒதுக்கி கொடுத்தது.

இதுபோக, பஸ் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் பல்வேறு தனியார் கடைகள் வாடகைக்கு இயக்கி வருகிறது. இதில் கிடைக்கும் வருமானம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் உற்சவத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சினிமா தியேட்டருக்கு குத்தகை

அந்த வகையில், பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு பின்புறம் 1 ஏக்கர் 80 செண்ட் நிலம் உள்ளது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த இடத்தை பண்ருட்டியை சேர்ந்த கணபதி மனைவி பூங்காவனம் என்பவருக்கு சினிமா தியேட்டர் அமைப்பதற்காக குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

ஆனால் அந்த இடத்தில் அவர் சினிமா தியேட்டர் கட்டவில்லை. குத்தகை காலம் முடிவடைந்தும், அவரது மகன் ராமச்சந்திரன் என்பவர் அந்த இடத்தை அனுபவித்து வந்தார். அங்கு அவர், கடைகள் கட்டி வாடகைக்கு விட்டும், வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலித்தும் வந்தார்.

ஐகோர்ட்டு உத்தரவு

இந்த நிலையில், இந்த சொத்துகளை இந்து சமய அறநிலையத்துறை மீட்க பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் நடவடிக்கை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இந்து சமய அறநிலையத்துறை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அதில் 12 வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட இடத்தை கையகப்படுத்திக் கொள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சீல் வைப்பு

அதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை கடலூர் இணைஆணையர் பரணிதரன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு ஆகியோர் பண்ருட்டியில் உள்ள அந்த இடத்திற்கு நேரில் சென்று மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதற்கு ராமச்சந்திரன் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்துபோக செய்தனர். பின்னர், அதிகாரிகள் அந்த இடத்தின் இரும்பு கதவை பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்