< Back
மாநில செய்திகள்
ரூ.165 கோடி ரொக்கம், 14 கிலோ தங்கம் சிக்கியது
மதுரை
மாநில செய்திகள்

ரூ.165 கோடி ரொக்கம், 14 கிலோ தங்கம் சிக்கியது

தினத்தந்தி
|
24 July 2022 1:11 AM IST

மதுரையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்களில் கடந்த 4 நாட்களாக நடந்த வருமானவரித்துறை சோதனையில் ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள், ரூ.165 கோடி ரொக்கப்பணம் மற்றும் 14 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மதுரையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்களில் கடந்த 4 நாட்களாக நடந்த வருமானவரித்துறை சோதனையில் ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள், ரூ.165 கோடி ரொக்கப்பணம் மற்றும் 14 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்..

கட்டுமான நிறுவனங்கள்

மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் கடந்த பல வருடங்களாக வருமானத்துக்கு உரிய வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடந்து வந்தது. நேற்று 4-வது நாளாக சோதனை நடந்து முடிந்தது.

அவனியாபுரம் பாலு என்பவரின் மகன்கள் அழகர், வக்கீல் முருகன், கிளாட்வே ஹவுசிங் என்ஜினீயர் ஜெயக்குமார், ஜெயபாரத் ஹவுசிங் சரவணக்குமார், அன்னை பாரத் செந்தில் குமார் அவரது தம்பி, 3 மகள்கள் ஆகியோரது வீடுகளிலும், இந்த நிறுவனங்களின் அலுவலகங்களில் நடந்து வந்த சோதனையில் மேற்கண்ட நகை, பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இந்த நிறுவனங்களின் அலுவலகங்கள், பங்குதாரர்களின் வீடுகள் அவனியாபுரம், வில்லாபுரம், திருப்பாலை, திருப்புவனம் ஆகிய இடங்களில் உள்ளன. சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

ரூ.150 கோடி

இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக விடிய விடிய நடந்த இந்த சோதனையில், முருகன் என்பவரது வீட்டில் இருந்து ரூ.75 கோடி ரொக்கம், 3 கிலோ 200 கிராம் தங்கம், ரூ.93 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும், செந்தில்குமார் வீட்டில் இருந்து 2 கிலோ 700 கிராம் தங்கம், ரூ.1 கோடியே 96 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், சரவணக்குமார் வீட்டில் இருந்து 3½ கிலோ தங்கம், வைரம், ரொக்கம் மற்றும் ஆவணங்களும், அழகர் வீட்டில் இருந்து ரூ.90 கோடி ரொக்கம், ரூ.130 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ஜெயக்குமாரின் கோச்சடை வீட்டில் இருந்து 4 கிலோ தங்கம், ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் வருமானவரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருமானவரித்துறையினரின் 4 நாள் சோதனையில் ஜெயபாரத் குழும நிறுவனங்களின் பங்குதாரர்களின் வீட்டில் இருந்து மொத்தம் 14 கிலோ தங்கம், ரூ.165 கோடி ரொக்கப்பணம், ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்