வேலூர்
போலீஸ் நிலையங்களில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்
|போலீஸ் நிலையங்களில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி கூறினார்.
காட்பாடி
போலீஸ் நிலையங்களில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி கூறினார்.
சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் நிலைய ஏட்டுகளுக்கு பதிவேடுகள் பராமரிப்பு குறித்த பயிற்சி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இன்று நடந்தது.
வேலூர் சரக டி.ஐ.ஜி., முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன், கிரண் ஸ்ருதி, கார்த்திகேயன், ஆல்பர்ட் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 250 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏட்டுகள் கலந்து கொண்டனர்.
போலீஸ் நிலைய பதிவேடுகளை பராமரிப்பது குறித்து ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகானந்தம் பயிற்சி அளித்தார்.
பயிற்சியை தொடங்கி வைத்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி பேசியதாவது:-
முறையாக பராமரிக்க வேண்டும்
போலீஸ் நிலையங்களில் பதிவேடுகள் சரிவர பராமரிக்கபடுவது இல்லை. ஒரு குற்றம் நடக்காததை குற்றம் நடந்ததாக பதிவு செய்வதும் தவறு. குற்றத்தை மறைத்து பதிவு செய்யாததும் தவறு.
நான் ஒரு போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தேன் அங்கு 8 தகவலை ஒரே பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். இது அதிர்ச்சியளித்தது. அந்த பதிவேடு தொலைந்தால் மீண்டும் 8 தகவல்களும் கிடைக்காது.
போலீஸ் நிலையங்களில் சரிவர பதிவேடுகள் பராமரிக்கப்படாதது மனவேதனையும், வலியையும் தருகிறது.
போலீஸ் நிலைய பதிவேடு என்பது மிக முக்கியமானது. அதனை முறையாக பராமரிக்க வேண்டும். போலீஸ் நிலையத்தில் உள்ள எழுத்தரை வேறு பணிக்கு அனுப்பக் கூடாது அவருக்கு எழுத்து பணி தான் முக்கியம்.
எந்த தகவலை கேட்டாலும் கொடுப்பதற்கு அவர் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி நன்றி கூறினார்.
குற்றவாளிகள் பற்றிய தகவல்கள்
பின்னர் டி.ஐ.ஜி.முத்துசாமி நிருபர்களிடம் கூறுகையில், பணியிடை பயிற்சி மையம் சார்பில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது போலீஸ் நிலையங்களில் உள்ள பதிவேடுகளை பராமரிப்பது எப்படி என்பதற்கான பயிற்சி ஆகும். இந்த பதிவேடுகளை நன்றாக பராமரித்தால் 30 ஆண்டுகளுக்கு பிறகும் குற்றவாளிகள் பற்றிய தகவல் தெரியும்.
எழுத்தர்களின் சுமை குறையும். எளிதாக கோப்புகளை கையாளலாம். இதன் மூலம் வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களின் தரம் உயரும் என நம்புகிறேன் என்றார்.