கோயம்புத்தூர்
ரூ.40½ லட்சத்தில் தெப்பக்குளம் புனரமைப்பு
|பொள்ளாச்சி நகராட்சியில் ரூ.40½ லட்சத்தில் தெப்பக்குளம் புனரமைக்கப்படுகிறது.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் உற்சவம் நடத்தப்படும். இந்த குளத்தை புனரமைத்து கொடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பின்னர் குளத்தை சுற்றி இருந்த புதர்கள் அகற்றப்பட்டு, நடைபாதை, படித்துறை அமைத்தல் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டன. தற்போது பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து தெப்பக்குளம் பராமரிப்பு பணி பொள்ளாச்சி நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகத்திடம் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கி, ஒப்பந்த உடன்படிக்கையை வழங்கினார். மேலும் நகராட்சி சார்பில் புனரமைக்கப்பட்ட தெப்பக்குளத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அப்போது தி.மு.க. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.