தலைமைச் செயலகம் அருகே மகளுடன் காவலர் போராட்டம் - தவறான சிகிச்சை குறித்து மருத்துவ விசாரணை நடத்த பரிந்துரை
|தவறான சிகிச்சை குறித்து மருத்துவ விசாரணை நடத்த மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு ஓட்டேரி போலீசார் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னை,
சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி. இவரது மகள் பிரதிக்ஷா(வயது 10) சிறுநீரக பிரச்சினை காரணமாக 3 வயது முதல் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை கடந்த 5 வருடங்களாக சிறுமி உட்கொண்டு வந்த நிலையில், மாத்திரையின் எதிர்விளைவு காரணமான பிரதிக்ஷாவின் வலது கால் பாதத்தில் கடுமையான அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மீண்டும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிரதிக்ஷாவுக்கு இரத்த உறைவு ஏற்பட்டதாக தவறாக கணித்ததன் விளைவாக பாதம் கருகியதுடன் உடலில் உள்ள இரத்தம் கெட்டுப்போனதாக கூறப்படுகிறது.
மேலும் தங்கள் அனுமதியின்றி இரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டதன் விளைவால் தனது மகளுக்கு வலிப்பு நோயும் ஏற்பட்டது என கோதண்டபாணி குற்றம் சாட்டியுள்ளார். இவை அனைத்தும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் நடந்தது எனவும், மருத்துவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோதண்டபாணி தலைமை செயலகம் அருகே பாதிக்கப்பட்ட தனது மகளுடன் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டேரி காவல் நிலையத்தில் கோதண்டபாணி புகார் அளித்தார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட ஓட்டேரி போலீசார், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி தவறான சிகிச்சை குறித்து மருத்துவ விசாரணை நடத்த மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் தலைமைக் காவலர் கோதண்டபாணி மகள் பிரதிக்ஷாவின் மருத்துவ அறிக்கை, சிகிச்சை முறை குறித்த ஆவணங்களை உரிய முறையில் ஆய்வு செய்து விளக்கமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்குனரகம் சார்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த விசாரணையில் மருத்துவர்களின் கவனக்குறைவால் சிறுமிக்கு பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால், முதற்கட்டமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னர் கிரிமினல் நடவடிக்கைகாக காவல்துறைக்கு மருத்துவ கல்வி இயக்குனரகம் சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.