சிவகங்கை
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு
|நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இடம் சேர்க்கைக்காக பெற்றோர்கள் அரசியல் பிரமுகர்களை சந்தித்து சிபாரிசு கேட்டு வருகின்றனர்.
நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இடம் சேர்க்கைக்காக பெற்றோர்கள் அரசியல் பிரமுகர்களை சந்தித்து சிபாரிசு கேட்டு வருகின்றனர்.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
தமிழகத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் வீதிகள் எங்கும் பள்ளிக்கூடங்களை தொடங்கி அங்கு பிள்ளைகளை படிப்பதற்காக சேர்க்கை நடத்தினர். ஆனாலும் ஏழ்மை காரணமாக சில குழந்தைகள் பள்ளிக்கு வர மறுத்தபோது அந்த பள்ளிகளில் மதிய உணவை வழங்கி அதன் மூலம் தமிழகம் முழுவதும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. அவ்வாறு தொடங்கப்பட்ட அரசு பள்ளிகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து சிறப்பாக செயல்பட்டு வந்தது.
பின்னர் கல்வியில் புதுமையை புகுத்துவதாக கூறிய சில தனியார் பள்ளிகள் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அறிமுகப்படுத்தியும், கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தும் பெற்றோர்களை தங்கள் பக்கம் இழுத்ததால் ஏராளமான பெற்றோர்கள் தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பி அனைத்து மாணவர்களையும் தனியார் பள்ளியில் சேர்க்க படையெடுத்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக
இதையடுத்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைய தொடங்கியது. அதன் பின்னர் தமிழக கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு மற்றும் அறிவியல் சாதனங்கள், ஸ்மார்ட் வகுப்புகள் உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்து தரமான கல்வியையும் வழங்கி வருவதால் தற்போது மீண்டும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இதேபோல் அரசு பொதுத்தேர்விலும் அரசு பள்ளிகளின் மாணவர்கள் தேர்ச்சியும் அதிகரித்து வருவதால் தற்போது மீண்டும் பெற்றோர்கள் தங்களது மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சிபாரிசு
சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான அரசு பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகிறது. இதில் தேவகோட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, தேவகோட்டை, சாக்கோட்டை உள்ளிட்ட ஏராளமான பகுதியில் அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதால் தற்போது நடப்பாண்டில் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
இதில் சில குறிப்பிட்ட அரசு பள்ளிகளில் நடப்பாண்டு மாணவர்களின் சேர்க்கை நிறைவு பெற்ற பின்னரும் கூட சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அந்த அரசு பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசியல் பிரமுகர்களை நேரில் சந்தித்து அவர்களின் சிபாரிசு கோரி வருகின்றனர்.