< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
நீலகிரி
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

தினத்தந்தி
|
26 July 2022 7:26 PM IST

ஊட்டி காந்தல் பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 5 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

ஊட்டி,

ஊட்டி காந்தல் பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 5 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சர்வதேச சுற்றுலா தலமான ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இந்த பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பொது இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு இடங்களை கண்டறிந்து, அதனை மீட்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில் ஊட்டி காந்தல் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 5 சென்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலர் மீனாட்சி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது அங்கு கடைகள் வைத்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டது.

அறிவிப்பு பலகை வைப்பு

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, காந்தல் பகுதியில் 5 சென்ட் இடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்தது. அந்த இடத்தில் தேநீர் கடை, மாட்டுத்தொழுவம், சிறிய வீடு என 12 செட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நேற்று அகற்றப்பட்டது. இந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு வராமல் இருக்க நகராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது என்றனர். ஆக்கிரமிப்பில் அகற்றப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.35 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்