சென்னையில் கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ஒத்திகை
|இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 16 மீட்பு கப்பல்களும், 7 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
சென்னை,
இந்திய கடலோர காவல்படை சார்பில் 10-வது தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒத்திகை சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் வங்க கடலே அதிரும் வகையில் நடந்த இந்த ஒத்திகையில் ஐ.சி.ஜி., சாகர், சவுரியா, சாணக், சாரங், வீரா, விக்ரஹா உள்பட 11 இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பல்கள், 5 சிறிய ரக சார்லி வகை மற்றும் அதிவேக படகுகள், இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ்., சுமித்ரா உள்பட மொத்தம் 17 கப்பல்கள் பங்கேற்றன.
இந்த ஒத்திகையில் ஸ்வராஜ் ஸ்வதீப் என்ற பயணியர் கப்பலும் ஈடுபடுத்தப்பட்டது. அதேபோல் டார்னியர் விமானம், சேத்தக் ஹெலிகாப்டர்கள், அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உள்பட 7 விமானங்களும் இடம்பெற்றன.
500 பேர் பயணம் செய்யக்கூடிய ஸ்வராஜ் கப்பலில், திடீரென பிடிக்கும் தீயை, கடலோர காவல்படை கப்பல்கள் அணைக்கும் செயல்முறை ஒத்திகை நடந்தது. போர் விமானங்களும், கப்பல்களும் வங்க கடலில் அணி வகுத்து வந்தது காண்போரை கவரும் வகையில் இருந்தது.
விபத்து ஏற்பட்டு கடலில் விழுந்து தத்தளிக்கும் விமானத்தை மீட்பது போன்ற செயல் முறை ஒத்திகையும் செய்து காட்டப்பட்டது தத்ரூபமாக இருந்தது. இதுதவிர கடலில் தத்தளிக்கும் நபர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்பது, அதிவேக படகுகள் மூலம் மீட்கப்பட்டு, மருத்துவ சேவை வழங்கக்கூடிய கப்பலில் கொண்டு சேர்ப்பது போன்ற ஒத்திகைகளும் நடந்தன. இதற்கு ஆளில்லா குட்டி விமானம், 'ஆட்டோமேட்டிக் ரிமோட் கன்ட்ரோல் பாய்' என்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் வங்காளதேசம், கொரியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், நைஜீரியா, மொரீசியஸ், இந்தோனேசியா உள்பட 16 நாடுகளைச் சேர்ந்த கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் வி.எஸ்.பதானியா, கிழக்கு பிராந்தி ஐ.ஜி., ஏ.பி.படோலா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
"இந்திய கடலோர காவல்படை சார்பில் 10-வது தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சி நடந்தது. விபத்து ஏற்பட்டால் எவ்வளவு விரைவாக சென்று மீட்பது தொடர்பான செய்முறை ஒத்திகையை வீரர்கள் நிகழ்த்தி காட்டினர்.
இந்திய கடலோர காவல்படையில் புதிய தொழில்நுட்பங்கள் அவ்வப்போது இணைக்கப்பட்டு வருகின்றன. தற்போது, கடலோர காவல்படையில் 172 கப்பல்களும், 77 விமானங்களும் உள்ளன. இவற்றை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன."
இவ்வாறு அவர்கள் கூறினர்.