பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
|நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியதால், ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (57 வயது). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி வேளச்சேரியில் உள்ள இடத்தை விற்பது தொடர்பாக ஒருவரைச் சந்திக்க வேளச்சேரி செல்வா நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்து பழனிச்சாமியை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பழனிச்சாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தரமணி போலீசார், பழனிச்சாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில், மதுரையை சேர்ந்த சுப்பையன் என்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 28 லட்சம் ரூபாய் பணத்தை பழனிச்சாமி, ஏமாற்றியதால் இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.