"முதல்-அமைச்சருக்கு இந்தி சொல்லித்தர தயார்" - குஷ்பு பேச்சு
|தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது என்று குஷ்பூ கூறினார்.
சென்னை,
வடமாநில தொழிலாளர்கள் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த தி.மு.க. அரசைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ, மாநில துணை தலைவர்கள் கரு நாகராஜன், திருப்பதி நாராயணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான பா.ஜ.க.வினர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய குஷ்பு, தி.மு.க.வில் இருப்பவர்கள் டெல்லிக்கு சென்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று விருப்படுவதாகவும், தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது என்றும் கூறினார்.
மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும், அவர் தற்போதே தனிப்பட்ட முறையில் இந்தி கற்றுக்கொள்ளத் தொடங்கி இருப்பார் என்றும் குறிப்பிட்ட குஷ்பூ, தனக்கு நன்றாக இந்தி பேசவும், எழுதவும் தெரியும் என்பதால், முதல்-அமைச்சருக்கு இந்தி சொல்லித்தர தயார் என்றும் தெரிவித்தார்.