< Back
மாநில செய்திகள்
4 மாதத்திற்குள் பணிகள் முடிந்து திறப்புக்கு தயாராகிறது: ரூ.100 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் - வீடற்ற ஏழை மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

4 மாதத்திற்குள் பணிகள் முடிந்து திறப்புக்கு தயாராகிறது: ரூ.100 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் - வீடற்ற ஏழை மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்

தினத்தந்தி
|
13 Oct 2022 2:52 PM IST

திருத்தணி அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடற்ற ஏழை மக்கள் பயன்பெற வசதிகாக ரூ.100 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு கிராமத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 38 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பில், ரூ.100 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 1,040 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

பின்னர் கட்டிட பணிகள் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி தொடங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு நிலங்களில் வாழும் குடியிருப்பு வாசிகள், பொருளாதாரத்தில் நலிவுற்ற வீடற்ற ஏழை மக்களுக்கு ஒதுக்கீடுவதற்கு ஏதுவாக இந்த குடியிருப்புகள் கட்டி முடிப்பதற்கு 20 மாதங்கள் காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேற்பார்வையில் ஒப்பந்ததாரர் அடுக்கு மாடி வீடுகள் 'எ' முதல் 'இ' வரை கொண்ட 13 பிளாக்குகளில் தரைத்தளம் மற்றும் 4 அடுக்கு குடியிருப்புகள் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. தற்போது 90 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், மீதமுள்ள பணிகள் இன்னும் 4 மாதத்திற்குள் வீடுகள் கட்டும் பணிகள் முழுமையாக முடிந்து பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திருவள்ளூர் மாவட்ட உதவி நிர்வாக பொறியாளர் ஒருவர் கூறுகையில்:-

மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் முருக்கம்பட்டு கிராமத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அனைத்து வசதிகளுடன் 410 சதுர அடி அளவில் 1,040 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகள் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு நிலங்களில் வாழும் குடியிருப்பு வாசிகள், பொருளாதாரத்தில் நலிவுற்ற வீடற்ற ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

வீடுகள் ஒதுக்கீடு கோரும் நபரின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்தியாவில் எந்தப் பகுதியிலும் சொந்தமாக கான்கிரீட் தளம் போட்ட வீடுகள் இருக்கக் கூடாது. மேலும் இத்திட்டத்திற்கு பயனாளிகள் குறையும் பட்சத்தில், அண்டை மாவட்டங்களான இராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து வீடுகள் ஓதுக்கீடு செய்யப்படும்.

இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் வீட்டின் மதிப்பு ரூ.13 லட்சம். வீடுகளைப் பெறும் பயனாளிகளுக்கு மத்திய அரசு ஒரு லட்சத்து 50 ஆயிரம், மாநில அரசு ரூ.7 லட்சம் என மொத்தம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மானியமாக வழங்குகிறது. பயனாளிகளின் பங்குத்தொகையாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தி வீடுகளை பெறலாம்.

இத்திட்டத்தில் வீடுகள் தேவைப்படும் பயனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தகத்தின் நகல் ஆகியவற்றை இணைத்து திருவள்ளூர் நிர்வாகப் பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு அளிக்க வேண்டும்.

இந்த மனுக்கள் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்து தகுதிவாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்து கொடுத்த பின்பு, வீடுகள் ஓதுக்கீடு செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்