நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சவால்
|உதய் மின் திட்டம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி சவால் விடுத்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மூன்று முறை கடுமையாக மின்கட்டணத்தை உயர்த்திய பிறகும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை நஷ்டத்தில் இயக்கும் நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (23.7.2024) பேட்டி அளித்ததில் இருந்தே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் என்ன நடந்தது என்பதையும், என்ன நடக்கிறது என்பதையும் அவர் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார் என்பது நன்கு புரிகிறது.
உதய் திட்டம் என்றால் என்ன? அதில் கையெழுத்திட்டதால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைத்த நன்மைகளில் ஒருசிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அன்றைய காலக்கட்டத்தில் மின் பகிர்மானக் கழகங்களின் கடன் மற்றும் நிதி நிலைமையை கருத்திற்கொண்டும், உதய் திட்டத்தில் சேர்வதால் அதிக வட்டிக்கான கடனை திரும்பச் செலுத்தி, நிதி இழப்பை குறைப்பதற்கான வாய்ப்பை கருத்திற்கொண்டும், மத்திய அரசிடமிருந்து தடையின்றி போதுமான நிலக்கரி பெற வேண்டியதை கருத்தில் கொண்டும், மத்திய அரசின் மின் திட்டங்கள் செயல்படுத்தவும், மத்திய அரசின் நிறுவனங்களிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற்று மின் பகிர்மான கழகத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து மேன்மைப்படுத்த முடிவு செய்து, உதய் திட்டத்தை 2017, ஜனவரி மாதம் முதல் செயல்படுத்த அம்மா அரசு ஒப்புக்கொண்டது.
இத்திட்டத்தின் மூலம் நிலுவையில் இருக்கும் 30,420 கோடி ரூபாய் மின் பகிர்மான கழகத்தின் கடன் தொகையை, 22,815 கோடி ரூபாய் மாநில அரசு எடுத்துக்கொண்டு அந்தத் தொகையை கடன் பத்திரம் மூலம் நிதி திரட்டி
மின்பகிர்மானக் கழகத்திற்கு வழங்கியது. அரசு வழங்கிய 22,815 கோடி ரூபாயையும், 2017-2018ல் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது, 2021-2022 வரை, ஆண்டுக்கு 4,563 கோடி ரூபாய் வீதம் இந்தக் கடன் தொகை மானியமாக மாற்றப்பட்டது.
இதனால் மின் பகிர்மான கழகங்களுக்கு 22,815 கோடி ரூபாய் கடன் குறைந்ததுடன், ஆண்டுக்கு 2,882 கோடி ரூபாய் வட்டி சேமிப்பு ஏற்பட்டது. இதில் மீதமுள்ள 25 சதவீதம், அதாவது 7,605 கோடி ரூபாயை மின் வாரியம் கடன் பத்திரங்களை வெளியிட்டு அரசு உத்திரவாதத்துடன் நேரடியாக நிதி திரட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
உதய் திட்டத்தை மாநில அரசு ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டதனால், மின்பகிர்மானக் கழகத்தின் கடன் சுமை குறைக்கப்பட்டதுடன், அதிக வட்டிக் கடன் திரும்பச் செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட வட்டி சேமிப்பு. நிலக்கரி ஒதுக்கீடு, மத்திய அரசின் திட்டங்கள், மத்திய அரசின் நிதி நிறுவனங்களிலிருந்து குறைந்த வட்டியில் பெறப்பட்ட கடன் ஆகியவற்றால் ஆண்டுக்கு சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது.
உதய் மின் திட்டத்தின் ஒரு முக்கிய அம்சத்தின்படி, இந்த உதவிகளுக்குப் பிறகும் மின் பகிர்மான கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டால், அந்த இழப்பில் 50 சதவீதம் வரை மாநில அரசு ஈடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இன்றைய அளவில் மின்பகிர்மான கழகம் உயிர்ப்போடு செயல்படுவதற்கு காரணம் இந்த உதய் திட்டம் தான்.
'உதய் மின் திட்டம் வலியுறுத்திய கீழே குறிப்பிட்ட ஷரத்துகளுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அம்மா அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி விலக்கு பெற்ற பின்பு, ஜனவரி 2017-ஆம் ஆண்டு கையெழுத்திட்டோம். அதன்படி:
விவசாய மற்றும் குடிசை மின் நுகர்வோர்களுக்கு மின் அளவிகள் (Meters) பொருத்தப்படமாட்டாது. வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
கைத்தறி மற்றும் விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.காலாண்டுக்கு ஒருமுறை மின்கட்டணம் உயர்த்தப்படாது. அதனால் ஏற்படும் நஷ்டத்தை மாநில அரசே ஈடு செய்யும்.
உதய் திட்டத்தில் தமிழ் நாடு அரசு கையெழுத்திட்டதால் மேலே குறிப்பிட்ட நன்மைகள் உட்பட பல விளக்கங்களை நான் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது, 2017 முதல் 2021 வரை சட்டமன்றத்திலும், பிறகு இன்றுவரை பலமுறை ஊடகங்கள் வாயிலாகவும், அறிக்கைள் வாயிலாகவும், பொது மேடையிலும் விளக்கியுள்ளேன். மேலும், நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன் என்றும் விடியா தி.மு.க அரசின் அமைச்சர்களுக்கு சவால் விடுத்துள்ளேன்.
எங்கள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடைய அறிவிப்பின்படி, 23.7.2024 அன்று நிர்வாகத் திறனற்ற இந்த விடியா தி.மு.க அரசு மின்கட்டணத்தை மூன்றாம் முறையாக உயர்த்தியதைக் கண்டித்து தமிழ் நாடு முழுவதும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்.
விடியா தி.மு.க அரசின் நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, விலைவாசி உயர்வுக்கு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுக்கு என்று பல்வேறு வகைகளில் தமிழக மக்களிடம் தொடர்ந்து எதிர்ப்பு அதிகரித்து வருவதைக் கண்டும்; மின்கட்டண உயர்வைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தமிழகம் முழுவதும் கிடைத்த வரவேற்பைப் பொறுக்க முடியாமல், அமைச்சர் தங்கம் தென்னரசு மின் கட்டண உயர்வுக்கு உதய் திட்டத்தில் நாங்கள் கையெழுத்திட்டதுதான் காரணம் என்று பழைய பல்லவியை பாடியுள்ளார்.
நான் இந்த விடியா தி.மு.க அரசுக்கு மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது இதுதான். உதய் மின் திட்டத்தினால் ஏற்பட்ட நன்மைகளையும், தமிழக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதையும், தற்போது மின்கட்டண உயர்வு தேவையில்லை என்பதையும், மின்சாரத் துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு அவர்கள் குறிப்பிடும் நாளில், அவருடன் நான் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். அவர் தயாரா?
மூன்றாண்டு ஆட்சிக்குப் பிறகும், மூன்று முறை கடுமையான மின்கட்டணத்தை உயர்த்திய பிறகும், தங்களது நிர்வாகத் திறமையின்மை காரணமாக தமிழ் நாடு மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்க முடியாமல் உள்ளதை மறைக்க, எங்கள் மீது பழிபோடுவதை விட்டுவிட்டு, இனியாவது தமிழ் நாடு மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.