விழுப்புரம்
நூலகம் செல்வோரை முடக்கிவரும்தொழில்நுட்பம் மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா? ஆசிரியர்கள் கருத்து
|நூலகம் செல்வோரை முடக்கிவரும்தொழில்நுட்பம் மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா? என்று ஆசிரியர்கள் மாணவா்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
"என்னிடம் நீ தலைகுனிந்து படித்தால், உன்னை தலைநிமிரச் செய்வேன்'', இதுதான் நூலகம் நமக்குச் சொல்லும் அறிவுரை.
வாசிக்கும் பழக்கம்
புத்தகங்களை படிக்கும் பழக்கம் இருந்தால், சக மனிதர்களை நேசிக்கும் பழக்கம் தன்னாலே வரும். சிந்தனைகள் நிரம்பிய பெட்டகமாக இருக்கும் புத்தகங்கள் பலருக்கு, பலவிதமான சிந்தனைகளை தூண்டுகின்றன. அந்த சிந்தனைதான் ஒரு மனிதனை பல்வேறு இடங்களில் உயர்த்தி பிடிக்கின்றன.
அற்புதம் நிறைந்த புத்தகங்களை நூலகங்கள் போய் வாசிக்கும் பழக்கம் சமீபகாலமாக அருகி வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியே அதற்கு தூபமிடுகிறது. இருப்பினும் வாசிப்பை நேசிப்பவர்கள், இன்றும் நூலகத்தை நோக்கி நடைபோட்டு, புத்தகங்களை தேடிதேடிப் படிக்கத்தான் செய்கின்றனர். புத்தக கண்காட்சிகளில் பிடித்த புத்தகங்களை வாங்கி படிக்கவும் செய்கிறார்கள்.
நூலக வகுப்பு
குழந்தைப் பருவம் முதல் புத்தக வாசிப்புத் திறனை ஏற்படுத்த, பள்ளிக்கூட கல்வியில் இருந்தே ஊக்கப்படுத்தப்படுகிறது.
அதற்காக பள்ளிக்கூடங்களில் ஒரு வாரத்தில் 40 பாட வகுப்புகளில், புத்தகங்களைத் தேடிப் படிப்பதற்காக ஒரு பாடவகுப்பு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகுப்புகளில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அறிவியல், தனிமனிதர்கள், சிந்தனைகளை தூண்டும் புத்தகங்கள் உள்பட பல்வேறு புத்தகங்கள் வழங்கப்பட்டு, அதை படிக்க வைத்து, அதன் வாயிலாக வினாக்கள் கேட்டு விடையளிப்பது, கலந்துரையாடுவது போன்றவை நடத்தப்படுகின்றன. இதுதவிர போட்டிகளும் நடத்தப்பட்டு, மாணவர்களை உத்வேகப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன. கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்திலும் இந்த நிகழ்வுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மாணவர்கள் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று படிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மாணவர்கள் அவ்வாறு படிக்கிறார்களா? நூலகப் பாடவகுப்புகள் பள்ளிக்கூடங்களில் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது இருக்கிறது.
பல பள்ளிக்கூடங்களில் நூலகங்கள் கண்காட்சியாகவே இருக்கின்றன என்ற புகார்களும் வருகின்றன.
புத்தக வாசிப்பு அவசியம்
பள்ளிகளைப் போன்று, கல்லூரிகளில் இதற்கென்று தனிவகுப்புகள் இல்லாவிட்டாலும், கல்லூரி வகுப்பு நேரம் போக, மற்ற நேரத்தில் பொது நூலகங்கள் மற்றும் துறை சார்ந்த நூலகங்களில் மாணவ-மாணவிகள் நேரத்தை செலவிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் நேரத்தை செலவிடும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை என்பது சொற்ப அளவிலேயே இருக்கிறது. செல்போன் மோகம், அவர்களை அதில் மூழ்கடித்துவிட்டதால், நூலகங்களில் அறிவுசார்ந்த புத்தகங்களைத் தேடி படிக்கும் ஆர்வம் இல்லாமலே போய்விட்டது. இதனை மாற்ற வேண்டும். புத்தக வாசிப்பின் அவசியத்தை எடுத்துக்கூறி, மாணவர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டிய சூழல் உள்ளது.
287 பள்ளிகளில் நூலகங்கள்
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம்- திண்டிவனம் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இம்மாவட்டத்தில் 1,208 அரசு பள்ளிகளும், 17 நகராட்சி பள்ளிகளும், 65 அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகளும், 199 நிதி உதவி பெறும் பள்ளிகளும், 23 பகுதிநேர நிதி உதவி பெறும் பள்ளிகளும், 89 மெட்ரிக் பள்ளிகளும், 140 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளும், 3 சிறப்பு பள்ளிகளும், 26 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும், 36 சுயநிதி பள்ளிகளும் ஆக மொத்தம் 1,806 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 287 அரசு பள்ளிகளில் நூலகம் செயல்பட்டு வருகிறது. இதுதவிர ஒரு சில அரசு நடுநிலைப்பள்ளிகளிலும் நூலகம் இயங்குகிறது. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 10 அரசு கல்லூரிகளிலும் நூலகம் செயல்பட்டு வருகிறது.
பள்ளி-கல்லூரிகளில் இருக்கும் நூலகங்கள் சிறப்பான முறையில் செயல்படுகின்றதா? என்று ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-
சவால்
பொதுநூலக இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான இளம்பகவத் கூறுகையில், ' புத்தக வாசிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை போட்டி மூலம் தேர்வு செய்து, அவர்களை தேசிய அளவில், சர்வதேச அளவில் சுற்றுப்பயணம் அழைத்து செல்கிறோம். அரசு புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த கொண்டு வந்திருக்கும் திட்டங்கள் மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தக வாசிப்பு ஆர்வம் சற்று மேம்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், இந்த பணியை திறம்பட கொண்டு செல்வது ஒரு சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. டிஜிட்டல் மூலம் பார்ப்பது சுலபம். ஆனால் அதிலும் பாதகமான அம்சங்கள் இருக்கின்றன. அரசின் வாசிப்பு இயக்கம் தொடர் நிகழ்வாக இருக்கும்' என்றார்.
மாணவர்கள் போகாத இடம்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது,'பள்ளி வளாகத்தில் மாணவர்கள் போகாத ஒரு இடமாக நூலகம் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை சற்று மாறி இருக்கிறது. மாணவர்களுக்கு புத்தக வாசிப்புத்திறனை மேம்படுத்தவும், நூலகங்களில் தேவையான புத்தகங்களை வாங்கி வைக்கவும் கல்வித்துறை சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் நூலகங்களில் புத்தகங்கள் அதிகம் இருக்கின்றன. நூலகங்களை நிர்வகிக்க நூலகர் என்ற பதவி கிடையாது. அதற்கென்று ஒரு ஆசிரியருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவர் கற்பித்தல் பணியோடு சேர்த்து இதை மேற்கொள்கிறார். எனவே இதற்கென்று தனியாக ஒருவரை நியமித்தால் புத்தக வாசிப்பு, மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்த முடியும்' என்றார்.
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவு படிக்கும் மாணவி தாகீரா பானு:-
நானும் எனது சக தோழிகளும் தினமும் மதிய உணவு இடைவேளையின்போது பள்ளியில் இருக்கும் நூலகத்திற்கு சென்று அங்கிருக்கும் நூல்களை படித்து வருகிறோம்.
அறிவியல் வளர்ச்சியை மேம்படுத்த ஏறத்தாழ 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிக்கு எங்களை எளிதாக தயார் செய்யும் வகையிலும் எண்ணற்ற நூல்கள் உள்ளன. தற்போது பள்ளியில் நடந்து வரும் கலைத்திருவிழா போட்டிக்கு விவாத மேடையில் கருத்துக்களை சொல்ல இங்குள்ள நூல்களை படித்தது உதவிகரமாக இருந்தது. இப்படி எல்லாவற்றுக்கும் பள்ளி நூலகம் சிறந்த முறையில் பயன் அளிக்கிறது. எங்களுக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் நூலகத்திற்கு சென்று நாங்கள் படித்து வருகிறோம்.
இடவசதி இல்லை
கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 கணித பாடப்பிரிவு படிக்கும் மாணவர் கீர்த்திவாசன்:-
இணையதளம் மூலம் தெரிந்துகொள்ள முடியாத பல அரிய தகவல்களையும் எங்கள் பள்ளியில் இயங்கும் நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் மூலம் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கிறது.
தற்போதைய நவீன காலத்திற்கு தகுந்தாற்போல் அறிவுசார்ந்த புத்தகங்கள் ஏராளமாக இல்லை. பெரும்பாலான புத்தகங்கள் கடந்தகால பழைய கதைகள் அடங்கிய புத்தகங்களாகவே இருக்கிறது. பொது அறிவை வளர்க்கும் விதமான புத்தகங்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. எங்கள் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் அருகில் உள்ள ஒரு வகுப்பறையில் நூல்களை வைத்துள்ளனர்.
அங்கு நாங்கள் அமர்ந்து நூல்களை படிப்பதற்கான போதிய இடவசதி, இருக்கை வசதிகள் கிடையாது. அங்கிருந்து நூல்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்துதான் படிக்கக்கூடிய நிலைமை இருக்கிறது. சிறப்பாக இயங்குகிறது
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா:-
எங்கள் பள்ளியில் 4 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவிகளின் பொது அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக எங்கள் பள்ளியில் நூலகம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள நூற்றாண்டு விழா கட்டிடம் ஒன்றை தேர்வு செய்து அங்கு நூலகம் இயங்கி வருகிறது. அந்த நூலகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 100 மாணவிகள் அமர்ந்து படிப்பதற்கான வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்.
எங்கள் பள்ளியை பொறுத்தவரை இங்குள்ள நூலகத்தை பயன்படுத்தாத மாணவிகள் யாருமே இருக்க முடியாது. எல்லோரது கையிலும் நூல்கள் தவழ்கிறது. இந்நூலகம் சிறப்பான முறையில் இயங்க சிறப்பு ஆசிரியர்களாக 3 பேர் நியமிக்கப்பட்டு அவர்கள் கவனித்து வருகின்றனர். எங்கள் பள்ளி நூலகத்தில் போதுமான புத்தகங்கள் இருக்கிறது, பற்றாக்குறையே கிடையாது. ஏனெனில் அவ்வப்போது பிறந்த நாள் பரிசு, அன்பளிப்பு என பலரும் நூல்களை வாங்கி பள்ளிக்கு கொடுத்து வருகின்றனர். இதனால் எங்கள் பள்ளியின் நூலகம் எந்த குறையுமின்றி மிகவும் சிறப்பாகவே இயங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் எங்கள் பள்ளி மாணவிகள் 18 பேர், நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதித்துள்ளனர். அதற்கு இந்த நூலகம் பேருதவியாக இருந்துள்ளது என்று சொல்லலாம்.
போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள்
செஞ்சி அருகே உள்ள துடுப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் புருஷோத்தமன் கூறியதாவது:-
செஞ்சி அரசு கல்லூரி இந்த ஆண்டுதான் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரி தற்போது, அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வரும் நிலையில், எங்களுக்கு தற்போது நூலக வசதி இல்லை. எங்கள் பகுதிக்கு கல்லூரி வந்ததே மகிழ்ச்சியான ஒன்று என்பதுடன், கட்டப்படும் புதிய கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட நூலகமும் அமைய வேண்டும் என்பதே என்னை போன்ற மாணவர்களின் எதிர்பார்ப்பாகும்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை 3-ம் ஆண்டு மாணவி எம்.திவ்யா:-
திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நூலகம் சிறப்பான முறையில் இயங்குகிறது. தற்போதைய சூழலில் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலான புத்தகங்கள் அதிகளவில் நூலகத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.
மேலும் கல்லூரியில் மின்னணு நூலகங்கள் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், போட்டித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு நூலகங்கள் மூலமாக தேவையான பயிற்சியை அளித்தால் கூடுதல் பலனுள்ளதாக அமையும்.
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி மாணவி சுபலட்சுமி:-
எங்கள் கல்லூரியில் உள்ள நூலகத்துக்கு நான் தினமும் சென்று புத்தகங்கள் மற்றும் தினசரி செய்தி தாழ்களையும் படிப்பேன். இது நமது, அறிவை மேலும் தூண்டுவதாக அமைகிறது. ஆராய்ச்சி படிப்பு போன்ற உயர்ந்த படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கும் ஒரு தூண்டுதலாக புத்தகங்கள் அமைகிறது. கல்லூரி நூலகத்தில் இருந்து 7 நாட்கள் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று படித்து வருவதற்கு அனுமதியும் அளிக்கிறார்கள். எனவே கல்லூரி நூலகம் என்பது எங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாகவே அமைகிறது.
அறிவுத்திறன் வளரும்
கள்ளக்குறிச்சி அருகே விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி முன்னாள் மாணவர் மதியழகன்:- நான் அரசு பள்ளியில் தான் பிளஸ்-2 வரை படித்தேன். நூலகம் இருக்கிறது மாணவர்கள் படிக்கலாம் என ஆசிரியர்கள் ஒருநாளும் கூறியது இல்லை. ஒவ்வொரு அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் நூலகம் கட்டாயம் இருக்க வேண்டும். வாரம் ஒருமுறை ஒரு மணி நேரம் மாணவர்கள் நூலகத்திற்கு சென்று படிப்பதற்கு அரசு நேரத்தை ஒதுக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
செயல்படவில்லை
மேமாலூர் கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி முன்னாள் மாணவர் ஜெஸ்லின்:-
நான் படித்த அரசு பள்ளியில் நூலகம் என்ற பெயரில் அறை இருந்தது. ஆனால் ஆசிரியர்கள் நூலகத்துக்கு சென்று படிக்குமாறு அறிவுறுத்தியதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் நூலகம் இருந்தும் செயல்படாத நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடியாமல் உள்ளனர். எனவே அரசு அனைத்து பள்ளிகளிலும் நூலகம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.