சென்னை
மின்சார ரெயிலில் மாதம் ஒரு முறை புறநகர் பகுதிக்கு வந்து கைவரிசை: வீடுகளில் திருடிய நகைகளை விற்று ஆதரவற்றோருக்கு உதவிய கொள்ளையன்
|சென்னையில் இருந்து மாதம் ஒரு முறை மின்சார ரெயிலில் புறநகர் பகுதிக்கு வந்து வீடுகளில் நகையை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். திருடிய நகைகளை விற்று ஆதரவற்றோருக்கு உதவியது தெரியவந்தது.
சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர், சீனிவாசன் நகர் சூராத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வரதராஜன். மர்மநபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகையை திருடிச்சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின்பேரில் பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தனி ஒருவனாக வந்த கொள்ளையன், வரதராஜன் வீட்டை நோட்டமிட்டு ஆள் இல்லாததை அறிந்து கைவரிசை காட்டியது தெரிந்தது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சென்னை எழும்பூர் பகுதியில் சாலையோரம் வசித்து வரும் அன்புராஜ் என்ற அப்பு (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான கொள்ளையன் அன்புராஜ், கடந்த 10 ஆண்டுகளாக சென்னை எழும்பூரில் இருந்து மாதம் ஒரு முறை மட்டும் புறநகர் பகுதிக்கு மின்சார ெரயில்களில் வந்து மாதம் ஒரு வீடு என்ற அடிப்படையில் திருட்டில் ஈடுபட்டு உள்ளார்.
இவ்வாறு பெருங்களத்தூரில் மட்டும் கடந்த 4 மாதத்தில் மாதம் ஒரு வீடு என 4 வீடுகளில் கைவரிசை காட்டிச்சென்றதும் தெரிந்தது. கொள்ளையடித்த நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தை எழும்பூர் பகுதியில் சாலையோரம் மற்றும் ெரயில் நிலையத்தில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு உணவு, உடை மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ந்து வந்துள்ளார்.
இதனால் தற்போது தனக்கு சிறைக்கு செல்வதில் எந்த ஒரு கவலையும் இல்லை என்றும் போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்து உள்ளதாக தெரிகிறது. அவரிடம் இருந்து 11 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.