மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு
|மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 30,300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர்,
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை கடந்த மாதம் 16-ந் தேதி தனது முழு கொள்ளளவை (120 அடி) எட்டி நிரம்பியது. அன்று காலை முதல் அணையின் உபரிநீர், 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. ஒரு சில நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.
அதன் அடிப்படையில் கடந்த 25-ந் தேதி இரவு அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 23 ஆயிரம் கன அடிக்கு கீழ் குறைந்தது. இதன் காரணமாக அன்று இரவு முதல் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது.
அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது.
தண்ணீர் திறப்பு
இந்த நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வரை மட்டுமே தண்ணீரை வெளியேற்ற முடியும். இந்த நிலையில் நேற்று காலை முதல் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதாவது, அணைக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வர தொடங்கியது.
எனவே நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரத்து 300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
அதாவது வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் 16 கண் மதகுகள் வழியாகவும், வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் கால்வாய் பாசனத்துக்கும் திறக்கப்பட்டது.