< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்; சட்டசபையில் அனைத்து கட்சியினரும் ஆதரவு
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்; சட்டசபையில் அனைத்து கட்சியினரும் ஆதரவு

தினத்தந்தி
|
24 March 2023 5:21 AM IST

கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்தார். இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.

சென்னை,

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானவர்கள் பணத்தை இழந்து, தங்கள் வாழ்வை மாய்த்து வருகிறார்கள். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ந்தேதி, சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்கள். இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

இந்தநிலையில் நேற்று காலை சட்டசபை கூடியதும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரினார். அதனை தொடர்ந்து அந்த சட்டத்தை மீண்டும் நிறைவேற்றி தர வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கனத்த இதயத்துடன்...

மிகவும் கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து, இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்ட துயரமான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையோடுதான் எனது உரையை நான் தொடங்குகிறேன்.

சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 17 லட்சம் ரூபாய் வரை இழந்து, அந்தக் கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்துக்கு முன்னால் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டு, இறந்து போயிருக்கிறார். ''தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள்; என்னைப்போல் பலரும் தங்களது குடும்பத்தை அனாதையாக விட்டுவிட்டுச் செல்லக் கூடாது. இத்தகைய நிலை யாருக்கும் வரக்கூடாது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ''எனது தற்கொலையே கடைசி தற்கொலையாக இருக்கட்டும்'' என்று எழுதி வைத்துவிட்டு, சென்னையைச் சேர்ந்த வினோத்குமார் தற்கொலை செய்துள்ளார்.

கருத்து கேட்கப்பட்டது

நாளுக்கு நாள் இந்த மரணங்கள் நம்முடைய கண்ணுக்கு முன்னால் நடக்கின்றன. இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சட்டத்தைக் கையில் வைத்திருக்கக்கூடிய இந்த அரசுக்கு இருக்கிறது. இணையதள விளையாட்டைத் தடுப்பது தொடர்பாக அரசால் இயற்றப்பட்ட, உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள், இணையவழி விளையாட்டுத் தொழில் நிறுவனர்கள் ஆகியோரிடம் 7-8-2022 அன்று கருத்துகள் கேட்கப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து 10,735 மின்னஞ்சல்கள் பெறப்பட்டன. அதில், 10,708 மின்னஞ்சல்களில், இணையதள சூதாட்டத்தையும், இணையதள ரம்மி விளையாட்டையும் தடை செய்வதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 மின்னஞ்சல்களில் மட்டுமே தடை செய்வதற்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள விளையாட்டுத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சமூக சிந்தனையாளர்கள், வக்கீல்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருடன் 11-8-2022 மற்றும் 12-8-2022 ஆகிய நாட்களில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி, கருத்துகள் பெறப்பட்டன.

விளக்கம் கேட்டார்

சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், பள்ளிக் கல்வித் துறையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையிலும், இணையதள விளையாட்டு உரிமையாளர்கள் மற்றும் இதர தரப்பினரிடையே நடத்தப்பட்ட ஆலோசனையின்படியும், பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 26-9-2022 அன்று அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.

அவசரச் சட்டத்திற்குப் பதிலாக ஒரு சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. அதற்கு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு-2022 என்று பெயர். இந்தச் சட்ட மசோதா கடந்த 19-10-2022 அன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்காக 26-10-2022 அன்று சட்டத் துறையால் அனுப்பப்பட்டது. இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் 23-11-2022 அன்று சில விளக்கங்களைக் கேட்டிருந்தார்.

நிறைவேற்றி தர வேண்டும்

இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட அமைச்சரும், 1-12-2022 அன்று கவர்னரை நேரில் சந்தித்து மீண்டும் விளக்கத்தை அளித்தார். ஆனால், சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை 131 நாட்கள் கழித்து, சில குறிப்புகளுடன் 6-3-2023 அன்று சபாநாயகருக்கு திருப்பி அனுப்பியுள்ளார். கவர்னர் எழுப்பியுள்ள கேள்விகளும், அதற்கான பதில்களும் அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு, சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் பரிசீலனைக்கு வைக்கும் கருத்துருவானது அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்ட மசோதா உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இதனை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதயத்தால் உருவாக்கப்பட்டது

இந்தச் சட்டம் அறிவால் மட்டுமல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதை இந்த மன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அரசியல் காரணங்களில், கொள்கைகளில் நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம், அப்படி எழுவது இயற்கையானதுதான். ஆனால், மனித உயிர்களைப் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் இதயமுள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.

'எனது மரணம் கடைசியாக இருக்கட்டும்' என்ற சோகக் குரலும், 'என் குடும்பத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு குடும்பத்துக்கு ஏற்படக் கூடாது' என்ற அழுகுரலும் இனியொரு முறை இந்த மாநிலத்திலும் எழக்கூடாது. எழுமானால், சட்டத்தின் பொருளும் மாநிலத்தின் அதிகாரமும் நீர்த்துப் போனதன் அடையாளமாக ஆகிவிடும். சட்டம் ஒழுங்கைப் பேணுவதும், மக்களைப் பாதுகாப்பதும், குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதும், குற்றவாளிகளிடம் இருந்தும் மக்களைக் காப்பதும் மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையாகும்.

மனச்சாட்சியை உறங்க வைக்க முடியாது

மாநிலத்தின் ஆளுகை எல்லைக்குள் உள்ள மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும், காக்கவும் மாநில அரசுக்கு உரிமை உண்டு, மீண்டும் சொல்கிறேன். மாநில அரசுக்கு அந்த உரிமை உண்டு. மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாகூர், தி.மு.க. எம்.பி, எஸ்.ஆர். பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு, 21-3-2023 அன்று பதில் அளிக்கையில், பந்தயம் மற்றும் சூதாட்டமானது, அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப் பட்டியலின் 34-வது பிரிவில் இடம் பெற்றுள்ளதால் இது தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறதென்று மிகத் தெளிவாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

மனச்சாட்சியை உறங்கச் செய்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதை பிரகடனமாகவே இந்த மாமன்றத்தில் தெரிவிக்க நான் விரும்புகிறேன். எந்தச் சட்டத்தின் நோக்கமும் மக்கள் நலன் மட்டும்தான். மக்களைக் காப்பது ஒன்றே சட்டத்தினுடைய கடமை ஆகும். சட்டவியல் என்பதே, சமூக அறிவியல் தான் என்பதை உலகம் முழுவதும் இருக்கும் சட்டமேதைகள் ஒப்புக் கொள்வார்கள்.

இனியொரு உயிர் பறிக்கப்படாமல், இனியொரு குடும்பம் நடுத்தெருவில் நிற்காமல், இனியொரு நாள்கூட இந்த ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க அனைத்து உறுப்பினர்களும் இந்தச் சட்ட மசோதாவை ஆதரிக்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒருமனதாக நிறைவேற்றம்

பின்னர் மசோதாவை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தளவாய் சுந்தரம் (அ.தி.மு.க.), செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), சதன் திருமலைகுமார் (ம.தி.மு.க.), மாரி முத்து (இந்திய கம்யூனிஸ்டு), நாகைமாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஜவஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஷானுவாஸ் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் பேசினார்.

பின்னர் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அனைத்துக்கட்சி ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்