ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்அமைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம்..!
|ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்அமைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன், முதல் அமைச்சர் அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் மனு அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருந்த ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரவிச்சந்திரனின் தாயார் மனு அளித்தார். தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடர்ந்த வழக்கில் கோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில் பரோல் வழங்கப்பட்டது.
இதையடுத்து கடந்த நவம்பர் 11-ந்தேதி ரவிச்சந்திரன் பரோலில் வெளிவந்தார். தமிழக அரசு ரவிச்சந்திரனுக்கு ஏற்கெனவே 6 முறை பரோலை நீட்டித்திருந்தது. தொடர்ந்து 7-வது முறையாக பரோலை 30 நாட்கள் நீட்டித்துள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சூரப்பநாயக்கன்பட்டியில் தாயார் ராஜேஸ்வரியுடன் ரவிச்சந்திரன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு உச்சபட்ச அதிகாரம் கொண்டு விடுதலை செய்தது. அதேபோல் சட்டப்பேரவையில் 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தை முதல் அமைச்சர் தனது மேலான அதிகாரம் கொண்டு நிறைவேற்றி தன்னையும் விடுதலை செய்ய வேண்டுமென்று மனு அளித்திருக்கிறார்.