கரூர்
ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை
|கரூரில் உள்ள 6 ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
தக்காளி விலை உயர்வு
தமிழகத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தக்காளி விளைச்சல் இல்லாததால் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வந்தது. அங்கும் விளைச்சல் குறைந்த நிலையில் பருவமழை பெய்ததால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து தமிழகத்திற்கு வரத்து குறைந்தது. இதனால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது.
கரூர் தினசரி மார்க்கெட்டிற்கும் தக்காளி வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிகப்பட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு தக்காளி வழங்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் 1 கிலோ தக்காளி ரூ.60-amp;க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்து சென்னையில் விற்பனை செய்து வருகிறது.
ரூ.60-க்கு விற்பனை
இந்நிலையில் பிற பகுதிகளிலும் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அந்தவகையில் கரூரில் தற்போது 6 ரேஷன் கடைகளில் நேற்று முதல் தக்காளி விற்பனை தொடங்கியது. அதன்படி ராயனூரில் ஒரு கடையிலும், வெங்கமேட்டில் 2 கடையிலும், எல்.ஜி.பி. நகரில் ஒரு கடையிலும், அண்ணாநகரில் ஒரு கடையிலும், வையாபுரி நகரில் ஒரு கடையிலும் என கரூரில் 6 ரேஷன் கடைகளில் ஒரு தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதில் தக்காளி ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் தலா 75 கிலோ அளவில் வழங்கப்பட்டது. இதனால் ஒரு ரேஷன் கார்டுக்கு 1 கிலோ வீதம் தக்காளி வழங்கப்பட்டது. இதனையடுத்து ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் வரிசையில் நின்று தக்காளி வாங்கி சென்றனர். ரூ.60-க்கு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தக்காளி வாங்கி சென்றனர்.