< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை

தினத்தந்தி
|
4 Aug 2023 12:35 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

10 ரேஷன் கடைகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி உழவர் சந்தையில் ரூ.170-க்கும், காய்கறி மார்க்கெட்டில் ரூ.190-க்கும், சில்லரை கடைகளில் ரூ.200-ஐ தாண்டியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் முதற்கட்டமாக இரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் உள்ள இரூர், நாரணமங்கலம், பாடாலூர், அம்மாபாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் உள்ள அம்மாபாளையம், களரம்பட்டி, குரும்பலூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் உள்ள பாளையம், குரும்பலூரில் 2 ரேஷன் கடைகள், ஈச்சம்பட்டி ஆகிய 10 ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு நேற்று முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

600 கிலோ தக்காளி விற்பனை

மேற்கண்ட ரேஷன் கடைகளில் தக்காளியை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இரூரில் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு தக்காளி விற்பனையை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். அப்போது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன் உடனிருந்தார். ஒரு ரேஷன் கடைக்கு விற்பனை செய்ய 60 கிலோ தக்காளி தான் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் சிலர் தக்காளி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 10 ரேஷன் கடைகளிலும் மொத்தம் 600 கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி விலை உயர்வால் கவலையில் உள்ள இல்லத்தரசிகள் ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மற்ற ரேஷன் கடைகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்