< Back
மாநில செய்திகள்
பண்ருட்டி அருகே ரேஷன் கடை ஊழியர் கழுத்தை அறுத்துக்கொலை
கடலூர்
மாநில செய்திகள்

பண்ருட்டி அருகே ரேஷன் கடை ஊழியர் கழுத்தை அறுத்துக்கொலை

தினத்தந்தி
|
20 Aug 2022 7:20 PM IST

பண்ருட்டி அருகே ரேஷன் கடை ஊழியரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தடயங்களை மறைக்க மிளகாய்பொடி தூவிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார்(வயது 58). இவர் முத்தாண்டிக்குப்பம் வல்லம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அஞ்சலை தேவி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

நேற்று இரவு திலீப்குமார், இயற்கை உபாதை கழித்து விட்டு வருவதாக வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் நீண்டநேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை.

கரும்பு தோட்டத்தில் பிணம்

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் திலீப்குமாரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவரை பற்றிய எந்தவொரு தகவலும் தெரியவில்லை.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது கரும்பு தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் திலீப்குமார் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

கொலை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, திலீப்குமாரின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் திலீப்குமாரை மர்மநபர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததும், கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயங்களை மறைக்க கொலையாளிகள் மிளகாய் பொடியை தூவிச் சென்றதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்ற விவரம் தெரியவில்லை.

தனிப்படைகள் அமைப்பு

இதையடுத்து திலீப்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப்குமாரை முன்விரோதம் காரணமாக யாரேனும் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதோடு, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்