< Back
மாநில செய்திகள்
சரக்கு ஆட்டோவில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தல்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சரக்கு ஆட்டோவில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தல்

தினத்தந்தி
|
6 July 2022 12:51 AM IST

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே சரக்கு ஆட்டோவில் ஒரு டன் ரேசன் அரிசி கடத்தியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே சரக்கு ஆட்டோவில் ஒரு டன் ரேசன் அரிசி கடத்தியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு இது குறித்து நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் ஏட்டுகள் செல்வராஜ், மணிகண்டன் மற்றும் போலீசார் பேராவூரணி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

சரக்கு ஆட்டோவில் கடத்தல்

அப்போது பேராவூரணியை அடுத்த காலகம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சரக்கு ஆட்டோவில் சிறிய, சிறிய சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்த அதன் உரிமையாளர் பேராவூரணியை அடுத்த செருபாலக்காட்டை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 52) மற்றும் சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த காலகம் பகுதியை சேர்ந்த கந்தகுமார் (50) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அதிக விலைக்கு விற்க முயற்சி

ரேஷன் அரிசி அந்தப் பகுதியில் உள்ள மீனவ கிராம மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதனை மீன் பண்ணை உரிமையாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சரக்கு ஆட்டோவையும் அதில் இருந்த ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்