விழுப்புரம்
திண்டிவனம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் ஒருவர் கைது; மற்றொருவருக்கு போலீஸ் வலைவீச்சு
|திண்டிவனம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
திண்டிவனம் பகுதியில் நேற்று ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார், திண்டிவனம் அருகே நெடிமோழியனூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த வாகனத்தினுள் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒருவர் கைது
உடனே அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திண்டிவனம் வசந்தபுரத்தை சேர்ந்த பட்டாபிராமன் மகன் சேகர் (வயது 37) என்பதும், இவரும் திண்டிவனம் கீழ்அருங்குணம் பகுதியை சேர்ந்த ராதா என்பவரும் சேர்ந்து திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை மூட்டைகளாக கட்டி அரவை மில்லில் கொடுத்து மாவாக அரைத்து அதனை கோழித்தீவனம் மற்றும்
மாட்டுத்தீவனத்திற்கு பயன்படுத்த கடத்திச்சென்றதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சேகரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 1½ டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராதாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.