கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு ரத யாத்திரை
|கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு ரதயாத்திரையை மதுரை ஆதீனம் தொடங்கி வைத்தார்.
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற காளிமலை பத்ரகாளியம்மன் கோவிலில் துர்காஷ்டமி திருவிழா 6 நாட்கள் நடக்கிறது. இதனையொட்டி கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு சமுத்திர கிரி ரதயாத்திரை நேற்று காலை தொடங்கியது.
பகவதி அம்மன் கோவில் முன்பு நடந்த ரதயாத்திரை தொடக்க விழாவுக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். காளிமலை அறக்கட்டளை முன்னாள் தலைவர் சலீம்குமார் முன்னிலை வகித்தார்.
சின்மயா மிஷின் சுவாமி நிஜானந்தா ஆசியுரை வழங்கினார். காளிமலை அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் விழா கொடியை குமரி கிழக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் ராஜாராமிடம் வழங்கினார்.
மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சமுத்திர கிரி ரத யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சாமிதோப்பு சிவசந்திரன் அடிகளார், இலங்கை அறங்காவலர் டாக்டர் செந்தில்வேல், இந்து முன்னணி மாநில பேச்சாளர் எஸ்.பி.அசோகன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் சங்க செயலாளர் முருகன், மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரத யாத்திரையில் பத்ரகாளியம்மன் விக்ரகம் பல வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. ரதத்துக்கு பின்னால் பெண் பக்தர்கள் தலையில் இருமுடி சுமந்து கொண்டும், ஆண் பக்தர்கள் தலையில் புனித நீர் குடம் ஏந்திய படியும் ஊர்வலமாக சென்றனர். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த சமுத்திர கிரி ரத யாத்திரை 22-ந் தேதி பத்துகாணி காளிமலையை சென்றடைகிறது. முன்னதாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாஸ்தா சன்னதியில் இருமுடி கட்டு மற்றும் புனித நீர் குடங்களில் நிரப்பும் நிகழ்ச்சியும் நடந்தது.