< Back
மாநில செய்திகள்
ராசிபுரம் பகுதியில் கனமழை:  தட்டான் குட்டை ஏரி நிரம்பியது   வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
நாமக்கல்
மாநில செய்திகள்

ராசிபுரம் பகுதியில் கனமழை: தட்டான் குட்டை ஏரி நிரம்பியது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

தினத்தந்தி
|
18 Oct 2022 12:23 AM IST

ராசிபுரம் பகுதியில் கனமழை: தட்டான் குட்டை ஏரி நிரம்பியது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

ராசிபுரம்:

ராசிபுரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தட்டான் குட்டை ஏரி நிரம்பியது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

ஏரி நிரம்பியது

ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர், அத்தனூர், குருசாமிபாளையம், அணைப்பாளையம், கவுண்டம்பாளையம், கூனவேலம்பட்டி புதூர், முத்துக்காளிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் வயல்கள், சிறுசிறு நீர் தேக்கங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. சிறிய ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது.

இந்த நிலையில் கனமழை காரணமாக ராசிபுரம் அருகே உள்ள தட்டான் குட்டை ஏரி நிரம்பியது. இதையொட்டி உபரிநீர் பெருக்கெடுத்து சென்றதால் அருகில் உள்ள ஓடைகள் உடைந்தன. மேலும் சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி குடியிருப்பு பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதியடைந்தனர்.

நிவாரணம்

இதனால் வீடுகளில் இருந்த பொருட்களை எடுத்து கொண்டு பொதுமக்கள் வெளியேறினர். தட்டான் குட்டை ஏரியின் அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்தது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கனமழை காரணமாக ஏரிகள் நிரம்பி ஓடைகள் உடைந்ததில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து குடியிருக்க முடியாமல் குழந்தையுடன் வெளியேற வேண்டியுள்ளது. எங்களுக்கு தற்போது தங்குவதற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வீடுகள் தர மறுக்கின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு எங்கள் குழந்தைகளுடன் நாங்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்