நாமக்கல்
ராசிபுரத்தில் பயங்கரம்: கூலித்தொழிலாளி அடித்துக்கொலை குடிபோதையில் மகன் வெறிச்செயல்
|ராசிபுரத்தில் குடிபோதையில் கூலித்தொழிலாளியை அடித்துக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம், ஆக.21-
ராசிபுரத்தில் குடிபோதையில் கூலித்தொழிலாளியை அடித்துக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கூலித்தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 70). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பெருமாயி. இவர்களது மகன் கார்த்திக் (38). இவர் கோழி வண்டி லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார்.
கார்த்திக்குக்கு திருமணமாகி அவருடைய மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் கார்த்திக் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார்.
அடித்துக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தந்தை ராஜிக்கும், மகன் கார்த்திக்குக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டுக்கு வரும் மின்வயரை ராஜி அறுத்து விட்டாராம். இதனால் தந்தை, மகன் இடையே தகராறு முற்றியது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து இரவு 11 மணி அளவில் தந்தை-மகனுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் கட்டையால் தந்தை ராஜியை பயங்கரமாக அடித்தார். இதில் தலை மற்றும் காலில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
கைது
இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்ட ராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கார்த்திக்கை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்செங்கோடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். குடிபோதை தகராறில் தந்தையை மகனே அடித்துக்கொலை செய்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.