நாமக்கல்
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
|ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
ராசிபுரம்:
ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12-ம் ஆண்டாக விளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி காலையில் லட்சுமி கணபதி ஹோமம், விநாயகர், பாலமுருகன், மாரியம்மன், நித்திய சுமங்கலி கம்பம் ஆகியவற்றுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மேலும் மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் விளக்கு வைத்து அம்மனை வழிபட்டனர்.
திருவிளக்கு பூஜை கல்வி அபிவிருத்தி, திருமண பாக்கியம் உண்டாகவும், தொழிலில் மேன்மை அடையவும், நவக்கிரக தோஷங்கள் விலகவும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது. திருவிளக்கு பூஜையை கைலாசநாதர் கோவில் உமாபதி சிவாச்சாரியார், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தலைமை அர்ச்சகர் முருகேசன் பூசாரி மற்றும் மாரியம்மன் ஆலய அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர்.