விழுப்புரம்
1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய சிற்பம் கண்டெடுப்பு
|விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே நேமூர் கிராம ஏரிக்கரையில் கடந்த ஜூலை மாதம் கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது. மேலும் இதனருகே 6 முகங்களை கொண்ட சிற்பம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இதுபற்றி விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் கூறியதாவது:-
நேமூர் ஏரிக்கரையில் உள்ள கொற்றவை சிற்பத்தின் அருகில் சுமார் இரண்டரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட தனி சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதில் ஒன்றன்கீழ் ஒன்றாக 6 முகங்கள் காணப்படுகின்றன. அதற்குக்கீழும் இருந்திருக்கலாம், சிற்பம் சிதைந்துள்ளது. "இது கொற்றவைக்கு பலி கொடுக்கப்பட்ட வீரர்களின் தலைகள் எனும் ஐயத்தை ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்துள்ள மூத்த தொல்லியாளர் ராஜகோபால் "இந்த அமைப்பு முதன்முதலாக தமிழ்நாட்டில் இங்குதான் கிடைப்பதுபோல் தெரிகிறது" என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் "இவை வேண்டுதல் நிறைவேற கொற்றவைக்கு தங்களைத்தாங்களே பலி கொடுத்துக்கொண்ட வீரர்களின் தலைகள்" எனும் கருத்தை மூத்த கல்வெட்டு ஆய்வாளர்கள் துளசிராமன், வில்லியனூர் வெங்கடேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். காளிக்கு தங்களை பலி கொடுத்துக்கொண்ட வீரர்களின் தலைகள் மூங்கில்களில் வரிசையாக தொங்குவதாக கலிங்கத்துப்பரணியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேமூரில் இருக்கும் சிற்பம் இதை நினைவூட்டுவதாக இருக்கிறது. கொற்றவைக்கு பலி கொடுக்கும் அரிகண்டம் அல்லது நவகண்ட சிற்பங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிடைத்துள்ளன. ஆனால் வீரர்களின் தலைகள் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்த நிலையில் காணப்படும் அரிய சிற்பம் தமிழ்நாட்டில் முதன்முறையாக நேமூர் கிராமத்தில்தான் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்லவர் காலத்தை சேர்ந்த 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த சிற்பம் தமிழ்நாட்டு சிற்பக்கலை வரலாற்றிற்கு புதிய வரவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.