ராமநாதபுரம்
வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்
|ராமநாதபுரம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பருவமழை
தமிழகத்தில் பருவமழை காலங்களில் கொசுக்கள் அதிகரித்து மர்ம காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் நோய் ஏற்படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் பருவமழைக்கு முன்னதாகவே டெங்கு போன்ற மர்ம காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. டெங்கு பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து டெங்கு பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறைக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி உள்ளது.
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே பெய்த மழையால் தேங்கிய மழைநீரில் டெங்கு கொசுக்கள் பெருகி காய்ச்சலை உருவாக்கி வருகின்றன. மாவட்டம் முழுவதும் மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏராளமானோருக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களில் பலருக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கூறியும், சில இடங்களில் வைரஸ் காய்ச்சல் என்றும் சிகிச்சை அளித்து வருகின்றனர். ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுசுகாதார ஆய்வு மையம் உள்ளது என்றும் இந்த ஆய்வகத்தில் பரிசோதனை செய்தால்தான் டெங்கு காய்ச்சல் உறுதி செய்ய முடியும் என்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
டெங்கு பாதிப்பு
ராமநாதபுரம் சுகாதார வட்டத்தில் நேற்று முன்தினம் 31 பேரும், நேற்று 41 பேரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 30 வயது நபரும், பரமக்குடி ஆஸ்பத்திரியில் மண்டபம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவரும் என 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 11 பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபோன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், தலைவலி, கடும் உடல்வலி, கண் எரிச்சல், தொண்டை வலி, எலும்பு இணைப்புகளில் வலி, இரவு நேரங்களில் குளிர் போன்ற அறிகுறிகள் உள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு உருவாகி வருவதாலும், மக்கள் அதிகமான அளவில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாலும் அச்சம் அடைந்துள்ளனர். கொசுக்களால் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசு ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.