பலாத்காரம் செய்து வீடியோ: பாலியல் கொடுமை வழக்கில் மேலும் 4 பேர் கைது
|பெண்ணின் பலாத்கார வீடியோ மற்றும் போட்டோவை காட்டி மிரட்டி, மேலும் சிலர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ராமேஸ்வரம்,
இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் உல்லாசமாக இருந்த வீடியோவை காண்பிடித்து மிரட்டி அவரை கற்பழித்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தெரிவித்த போலீசார், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண்ணை அவருடன் படித்த சமயசந்துரு(வயது 20) என்பவர் ஆசை வார்த்தை கூறி காதலித்தாராம். இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு அடிக்கடி சந்தித்து வந்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு வயது 18-க்கு குறைவாக இருந்தது.
இந்நிலையில் இளம்பெண்ணை வாலிபர் மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தனுஷ்(20) என்பவர் வீடியோ எடுத்துள்ளார். அதேபோல் தனுசும் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனை சமய சந்துரு வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த வீடியோவை காட்டி அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் இளம்பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளான். அதையும் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவை பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் எனவும் மிரட்டி இளம்பெண்ணை அடிக்கடி கூட்டு பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயமானது. அதை அறிந்த அந்த வாலிபர்கள் அவரை மிரட்டி, பணம், நகை கேட்டதாகவும், அதற்கு இளம்பெண் மறுத்ததால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாகவும் தெரிகிறது. இதனை அறிந்த மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் இதுகுறித்து திருவாடானை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சமய சந்துரு, தனுஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அதில் சமயசந்துரு, தனுஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணை பலாத்கார வீடியோ மற்றும் போட்டோவை காட்டி மிரட்டி மேலும் சிலர் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான்(30), கவின்(19), முபின்(20), மதனீஸ்வரன்(19) ஆகிய 4 பேரை திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய வாலிபர் ஒருவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.