திண்டுக்கல் அருகே சகோதரிகள் கூட்டு பலாத்காரம் - 3 பேர் கைது, தலைமறைவான ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு
|திண்டுக்கல் அருகே சகோதரிகளை கத்தி முனையில் கடத்திச் சென்று 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, கோவில் திருவிழாவிற்கு காதலர்களுடன் வந்த இரு இளம் பெண்களை இளைஞர்கள் கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட இருவரும் சகோதரிகள் என்பதும், இதில் ஒருவர் 17 வயதே நிரம்பிய பள்ளி மாணவி என்பதும் தெரியவந்துள்ளது. மற்றொருவர் 19 வயது இளம் பெண்ணான நிலையில், அவர் திருமணமானவர் என்றும், திருமணமான ஆறே மாதத்தில் விவாகரத்து பெற்று, கணவரைப் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒட்டன் சத்திரம் அருகேயுள்ள இடையக்கோட்டையில், தங்களின் காதலர்களுடன் கோவில் திருவிழாவிற்கு வந்த இருவரும், அருகில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு நள்ளிரவில் சாலையில் நின்றுள்ளனர். அப்போது வந்த 4 இளைஞர்கள் பெண்களின் காதலர்களை கயிறால் கட்டிப்போட்டும், பெண்களை கத்தி முனையில் மிரட்டியும் கடத்திய நிலையில், திண்டுக்கல் தாமரைக்குளம் பகுதியில் வைத்து சகோதரிகள் இருவரையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரண்குமார், முத்தழகுபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் முருகபவனத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையிலடைத்த நிலையில், தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் பிரசன்ன குமார் என்ற இளைஞரை வலை வீசி தேடி வருகின்றனர்.