வீட்டு சிறையில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: திடுக்கிடும் தகவல்
|வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவி பத்திரமாக மீட்கப்பட்டார்.
சென்னை,
சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி ஒருவர், அண்மையில் பள்ளிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், காணாமல் போன மாணவி, சென்னை கொருக்குபேட்டையில் உள்ள வீடு ஒன்றில், அடைத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்த போலீசார், அங்கு விரைந்து சென்றனர். வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவி பத்திரமாக மீட்கப்பட்டார். அந்த மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
திருமண ஆசை காட்டி அந்த சிறுமியை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ராஜபாண்டி (வயது 27) என்பவர் கடத்தி சென்று வீட்டில் சிறை வைத்துள்ளார். அவருடைய நண்பர் ரமேஷ் என்பவரும் அந்த வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கொடூரமான முறையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த அதிர்ச்சி தகவல்களை தொடர்ந்து ராஜபாண்டி மற்றும் ரமேஷ் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான ரமேஷ் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர். அவர் ஊர்க்காவல் படையில் டிரைவராக வேலை பார்த்துள்ளார். அவர் தன்னை வெளியில் போலீஸ்காரர் என்று கூறிக் கொண்டு பந்தாவாக சுற்றி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு, மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
வீட்டில் சிறை வைத்து பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.