< Back
மாநில செய்திகள்
மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

தினத்தந்தி
|
15 July 2023 10:54 PM IST

மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்தாண்டு 36,206 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்நிலையில் மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (ஜூலை 16 ந் தேதி) வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் நாளை காலை 10 மணிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதனை வெளியிடுகிறார். இதனைத் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் சுற்று கலந்தாய்வை மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு ஜூலை 20 ந் தேதி தொடங்குகிறது.

முன்னதாக இது தொடா்பாக மருத்துவக் கலந்தாய்வு குழு வெளியிட்ட அறிவிப்பில், "எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு இணையதளத்தில் ஜூலை 20-ஆம் தேதி தொடங்குகிறது. நீட் தோ்வில் தகுதி பெற்ற மாணவா்கள் இணையதளத்தில் ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்ய வேண்டும். 25-ஆம் தேதி இரவு 8 மணி வரை கட்டணம் செலுத்தலாம். 22 முதல் 26-ஆம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களைத் தோ்வு செய்யலாம்.

27, 28ஆம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தொடா்ந்து 29ஆம் தேதி இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் வெளியிடப்படும். 30ஆம் தேதி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்.

சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும். இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9, 3ஆம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31இல் நடைபெறும். மூன்று சுற்று கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பா் 21ஆம் தேதி நடைபெறும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்