< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை: பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு
மாநில செய்திகள்

ராணிப்பேட்டை: பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு

தினத்தந்தி
|
12 Nov 2023 11:23 PM IST

பட்டாசு வெடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை,

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது கவனமுடன் வெடிக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையிலும், எதிர்பாராதவிதமாக சில சமயங்களில் பட்டாசு விபத்து ஏற்படுகிறது. அதேபோல ராணிப்பேட்டையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் - அஸ்வினி ஆகியோரின் மகள் நவிஷ்கா(4) பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டது. இதனால், சிறுமியில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் வலியில் துடித்த நவிஷ்காவை அவரது பெற்றோரும், உறவினர்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பட்டாசு வெடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும், சிறுமியின் உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் பட்டாசு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பட்டாசு விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்