< Back
மாநில செய்திகள்
தலைவிரித்தாடும் ஜாதிய வன்கொடுமை: வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு - எல்.முருகன் குற்றச்சாட்டு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தலைவிரித்தாடும் ஜாதிய வன்கொடுமை: வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு - எல்.முருகன் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
13 July 2024 3:10 PM GMT

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ள போதைப்பொருட்களின் புழக்கம் வெட்ட வெளிச்சமாகி வருவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில், கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையால், பட்டியலின மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறது திமுக அரசு.

தமிழகத்தில் இறந்துபோன பட்டியலினத்தவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு கூட செய்ய முடியாத அவலம் போன்றவை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்றால், நானே அழைத்துச் சென்று காட்டுகிறேன். பட்டியலின மக்கள் வசிக்கும் அரசு மாணவர் விடுதியின் அவலம் சந்தி சிரிக்கிறது.

படி உயர்வு, பரிசுத்தொகை உயர்வு என தி.மு.க.வின் கபட நாடகத்தை யாரும் நம்பப்போவதில்லை. ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடும் போலி திராவிட மாடல் ஆட்சியில், இத்தனை அவலங்களை வைத்துக் கொண்டு ஆதி திராவிட மக்கள் நலன் காப்பதில் தமிழகம் முன்னணி என பொய் தம்பட்டம் அடிப்பதா..?

இந்தியாவிலேயே ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில், தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குவதாக கூறி தமிழக அரசு சார்பில் ஒரு மாய்மால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், போலி திராவிட மாடல் தி.மு.க. அரசுக்கும் பட்டியலின மக்கள் மீது திடீர் பாசம் பொங்கி வழியத் தொடங்கி இருக்கிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்களால் தி.மு.க. அரசு

தமிழக மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவமும், உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ள போதைப்பொருட்களின் புழக்கம் வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

பட்டியலின மக்களுக்கு அடிப்படை வாழ்வுரிமையை கூட தர மறுப்பது தான் போலி திராவிட மாடல் ஆட்சி. இந்த அவலத்தை பெருமையாக வெளியே சொல்ல இந்த அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை. மற்ற மாநிலங்களில் இருக்கும் அளவிற்காவது, பட்டியலின மக்களுக்கு அடிப்படை வாழ்வுரிமையை வழங்குவது என்பது ஒரு அரசின் அடிப்படை கடமை. தி.மு.க. அரசு இதற்கு துரும்பையாவது தூக்கிப்போடுமா என்ற கேள்வி தான் ஒவ்வொரு பட்டியலின சமூக மக்களின் மனங்களிலும் எழுகிறது.

இதற்கு பதில் சொல்வாரா மு.க.ஸ்டாலின்..?" என்று அதில் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்