சென்னை
மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ரெயிலில் ஏற சாய்வுதள வசதி வருகிறது - சென்னையில் சோதனை முறையில் பயன்பாடு
|மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் சக்கரநாற்காலியை பயன்படுத்தி ரெயிலில் ஏற உதவும்வகையில் சாய்வுதள வசதி வருகிறது. ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நேற்று இத்தகவலைத் தெரிவித்தார்.
ரெயில்களில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட சாய்வுதளங்களின் படங்களை வெளியிட்ட அவர் கூறியதாவது:-
'இதுபோன்ற சாய்வுதளங்கள் தற்போது சென்னை ரெயில்வே நிலையத்தில் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்கு அது மிகவும் உபயோகமாக இருப்பது தெரியவந்திருக்கிறது.
விரைவிலேயே வந்தே பாரத் ரெயில்களுக்கு இந்த சாய்வுதளங்கள் பயன்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து அனைத்து ரெயில்களுக்கும் இது நடைமுறைப்படுத்தப்படும்.
ரெயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே சக்கரநாற்காலிக்கும், சாய்வுதளத்துக்கும் முன்பதிவு செய்வதற்கு வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்மூலம், குறிப்பிட்ட பயணிகள் ஏறவேண்டிய, இறங்கவேண்டிய ரெயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முன்கூட்டியே சாய்வுதளம் தயாராக வைக்கப்படும்.
இந்த சாய்வுதளத்தை ரெயில் பெட்டி வாயிலில் எளிதாக பொருத்தமுடியும். அதன் அகலம், மிகவும் தாழ்வான சரிவு காரணமாக பயணிகளால் சிரமமின்றி பயன்படுத்த முடியும்.
இந்த சாய்வுதளத்தை சோதனை முறையில் பயன்படுத்தியபோது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.'
இவ்வாறு அவர் கூறினார்.