ராமநாதபுரம்
ராமேசுவரம் கோவிலில் பகலில் கூடுதல் நேரம் நடை திறப்பா?
|ஆகம விதிமுறைகளை மீறி ராமேசுவரம் கோவிலில் பகலில் நடை திறக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் பகல் 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் கடந்த சில வாரங்களாகவே மதியம் 1 மணிக்கு அடைக்கப்பட வேண்டிய கோவில் நடையானது தாமதமாகவே 2 மணிக்கு அடைக்கப்பட்டு வருவதாகவும் ஆகம விதிமுறைகளை மீறி கூடுதலாக 1 மணி நேரம் நடை திறந்து வைக்கப்பட்டு இருப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கோபி ஆச்சார் என்ற பக்தர் நேற்று பகல் 1.30 மணிக்கு கோவிலுக்கு வந்தார். அவர் கூடுதல் நேரம் நடை திறந்து வைத்துள்ளதற்கு என்ன காரணம்? என கேட்டார்.
அதற்கு அங்கு பணியில் இருந்தவர்கள் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்ற காரணத்தால் கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இதை தொடர்ந்து அவர் கோவில் அலுவலகத்தில் இருந்த துணை ஆணையரிடம் பேசினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ராமேசுவரம் கோவில் நடை திறப்பது, அடைப்பது குறித்து விளக்கம் கேட்டிருந்தேன். அப்போது பகல் 1 மணிக்கு கோவில் வழக்கமான நேரத்தில் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கு வந்து பார்த்ததில் 1 மணி கடந்தும் ஆகம விதிமுறைகளை மீறி கோவிலில் நடை திறக்கப்பட்டு சன்னதிகள் அனைத்தும் மூடப்படாமல் உள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.